கர்நாடகாவில் காங்கிரஸின் வெற்றி ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில், சித்தராமைய்யாவை முதலமைச்சராக்க கட்சித் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதே நேரம் காங்கிரஸை பல இக்கட்டான சூழல்களில் இருந்து மீட்டு, வெற்றியை நோக்கி அழைத்துச் சென்ற, அக்கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமாருக்கும் சரியான அதிகாரப் பங்கீடு அளிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
முதலமைச்சராகவும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும், 8 முறை எம்.எல்.ஏவாகவும் பதவி வகித்த சித்தராமைய்யா, இந்த தேர்தல் தாம் போட்டியிடும் கடைசி தேர்தல் என்று தெரிவித்திருந்தார்.
அதேபோல் இளைஞர் காங்கிரஸில் இருந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி அக்கட்சியின் மாநிலத் தலைவராக உள்ள டி.கே.சிவக்குமாருக்கு கௌரவமான பதவி வழங்கப்படும் என்றும் பின்னாளில் அவர் முதலமைச்சராக்கப்படலாம் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.