சீ..ப்போ.. எழுந்திரிம்மா.. கையை பிடித்து தள்ளிய எஸ்.பி.ஆபீஸ் போலீசார்..! நல்லா இருக்கு உங்க வரவேற்பு
Published : May 11, 2023 9:42 PM
சீ..ப்போ.. எழுந்திரிம்மா.. கையை பிடித்து தள்ளிய எஸ்.பி.ஆபீஸ் போலீசார்..! நல்லா இருக்கு உங்க வரவேற்பு
May 11, 2023 9:42 PM
சிறுமியை தாக்கிய புகாரில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி , திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டம் செய்த பெண்களையும் இளைஞர்களையும் அங்கிருந்த போலீசார் கையை பிடித்து இழுத்து தள்ளியதால் பரபரப்பு ஏற்பட்டது..
திண்டுக்கல் மாவட்டம் பழனி கீரனூர் வேலம்பட்டி பகுதியைச் சேர்ந்த சில பெண்களும் ஆண்களும் கூட்டமாக திண்டுக்கல் எஸ்.பி.அலுவலகம் வந்தனர். அவர்களின் கையில் புகார் மனுவை கொடுத்து வழக்கறிஞர் ஒருவர் , ஊர்வலமாக அழைத்து வந்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்க வந்திருப்பதாக கூறியதும், வெளியே உள்ள செட்டில் உள்ள போலீசாரிடம் புகார் குறித்து தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில் ஆவேசமாக அவர்களை எஸ்.பி அலுவலகத்திற்கு அழைத்துச்சென்ற வழக்கறிஞர், பெண்களையும் , இளைஞர்களை வாசலில் அமரவைத்ததால் காவலுக்கு நின்ற போலீசார் சத்தமிட்டனர்.
தங்கள் வீட்டு சிறுமியை சிலர் கத்தியால் குத்தி ஆடைகளை கிழித்து விட்டதாகவும், சிறுமி மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் நிலையில் கடந்த 8 ந்தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் தங்களுக்கு நியாயம் வேண்டும் என்றனர்.
போராட்டத்துக்கு துணையாக நின்ற வழக்கறிஞரை பிடித்து உள்ளே தள்ளிச்சென்ற போலீசார், அங்கு அமர்ந்திருந்தவர்களை , கையால் பிடித்து இழுத்து தள்ளி எழுந்திரக்க வைத்ததுடன் ஒருமையில் திட்டி விரட்டினர்
எப்படி எஸ்.பி.ஆபீஸ் வாசலில் அமர்ந்து போராட்டம் செய்வீர்கள் ? என்று கேட்டு, பாதுகாப்புக்கு நின்ற போலீசார் புகார் அளிக்க வந்தவர்களிடம் உரத்த குரலில் கடுமையாக மிரட்டினார்.
புகார் மனுவை கொடுத்து விட்டு வெளியே வந்த பெண்கள் , சிறுமியை தாக்கியவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காவிட்டால் இதைவிட பெரிய அளவில் போராட்டம் செய்வோம் என்று கூறினர்.