​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முதலிடம் பிடித்த விருதுநகர் மாவட்டம்.. திரும்பி பார்க்க வைத்த திண்டுக்கல் மாணவி..! வெளியான 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்

Published : May 08, 2023 8:46 PM



முதலிடம் பிடித்த விருதுநகர் மாவட்டம்.. திரும்பி பார்க்க வைத்த திண்டுக்கல் மாணவி..! வெளியான 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்

May 08, 2023 8:46 PM

தமிழ்நாட்டில் பிளஸ் டூ பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட அதிகமாகி உள்ளது. இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில், திண்டுக்கல்லைச் சேர்ந்த நந்தினி என்ற மாணவி 600-க்கு 600 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. அதன் முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். அதன்படி, 8 லட்சத்து 3 ஆயிரத்து 385 பேர் எழுதி இருந்த பிளஸ் டூ தேர்தவில், 7 லட்சத்து 55 ஆயிரத்து 451 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வழக்கம் போல் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்கள் 91.45 விழுக்காட்டினரும் மாணவியர் 96.38 விழுக்காட்டினரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12-ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் 97.85 விழுக்காடு தேர்ச்சியுடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 97.79 விழுக்காடு தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் 2-ஆம் இடத்தையும் 97.59 விழுக்காடு தேர்ச்சியுடன் பெரம்பலூர் மாவட்டம் 3ஆம் இடத்தையும் பிடித்துள்ளன. இராணிப்பேட்டை மாவட்டம் 87.30 விழுக்காடு தேர்ச்சியுடன் கடைசி இடத்தில் உள்ளது.

தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் தன்னம்பிக்கையை இழக்காமல் அடுத்து வரும் தேர்வில் வெற்றியடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் அன்பில் மகேஷ் கேட்டுக்கொண்டார்.மே 19ஆம் தேதி பதினோராம் வகுப்பு தேர்வு முடிவுகளையும் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளையும் ஒரே நேரத்தில் வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

பிளஸ் டூ தேர்வில் திண்டுக்கல்லைச் சேர்ந்த நந்தினி என்ற மாணவி தமிழ், ஆங்கிலம் உட்பட அனைத்துப் பாடங்களிலும் 100 சதவீத மதிப்பெண்கள் எடுத்து 600-க்கு 600 மார்க்குகள் பெற்றுள்ளார். தச்சுக் கூலித் தொழிலாளியின் மகளாக நந்தினி, ஆடிட்டர் ஆவதே தனது லட்சியம் என்று கூறியுள்ளார்.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், 326 அரசு பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சியை எட்டியுள்ளன. இது கடந்த ஆண்டை விட அதிகமாகும். 12ஆம் வகுப்பு தமிழ் மொழிப்பாடத் தேர்வில் 2 பேர் 100 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றுள்ள நிலையில், ஆங்கில மொழிப்பாடத் தேர்வில் 15 பேர் 100 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.