60 அடி ஆழ கிணற்றில் குதித்து நீச்சல் அடிக்கும் மாணவர் 10 அடி தொட்டியில் எப்படி பலியானார் ? சி.ஏ.டி. கல்லூரி விடுதியில் சம்பவம்
Published : May 08, 2023 3:02 PM
60 அடி ஆழ கிணற்றில் குதித்து நீச்சல் அடிக்கும் மாணவர் 10 அடி தொட்டியில் எப்படி பலியானார் ? சி.ஏ.டி. கல்லூரி விடுதியில் சம்பவம்
May 08, 2023 3:02 PM
தேனி மாவட்டம் குள்ளபுரத்தில் உள்ள சி.ஏ.டி கல்லூரி விடுதி மாணவர் ஒருவர் தண்ணீர் தொட்டியில் மர்மான முறையில் சடலமாக மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 60 அடி ஆழ கிணற்றில் குதித்து நீச்சல் அடிக்கும் திறன் கொண்ட மாணவர் 10 அடி ஆழமுள்ள தொட்டி தண்ணீரில் மூழ்கி பலியானதாக போலீசார் கூறுவதை ஏற்க முடியாது என மறுப்புத் தெரிவித்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் குள்ளபுரத்தில் இருந்து மருகால்பட்டி செல்லும் சாலையில் உள்ள சி.ஏ.டி கலை மற்றும் அறிவியல் கல்லூரி விடுதியில் தங்கி 2ஆம் ஆண்டு பி.எஸ்.சி வேளாண்மை படித்து வந்த மாணவர் அருண் பல்லவ் என்பவர் தான் தண்ணீர் தொட்டிக்குள் மர்மமான முறையில் சடலமாக மிதந்தவர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அடுத்த சின்னமுட்டில் கிராமத்தை சேர்ந்த சந்திரசேகர் என்பவரது மகன் அருண்பல்லவ் . இவரை சி.ஏ.டி கல்லூரியில் 9 லட்சம் ரூபாய் நுழைவுகட்டணம் இரண்டு ஆண்டு கல்விகட்டனம் 5 லட்சம் ரூபாய் கட்டி படிக்க வைத்தனர். இந்த நிலையில் கல்லூரி மாணவர் விடுதியில் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கி மாணவர் அருண் பல்லவ் உயிரிழந்துவிட்டதாக கூறி உடன் படிக்கின்ற மாணவர்கள் , சந்திரசேகருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். கல்லூரி நிர்வாகம் எந்த ஒரு தகவலும் தெரிவிக்காத நிலையில் கல்லூரிக்கு சென்று பார்த்த போது மாணவர் இறந்ததாக கூறப்பட்ட தொட்டியில் 10 அடிக்கு மட்டுமே தண்ணீர் இருந்துள்ளது.
60 அடி ஆழ விவசாய கிணற்றில் கூட அசால்ட்டாக குதித்து நீச்சல் அடிக்கும் திறன் கொண்ட மாணவர் அருண் பல்லவ் 10 அடி தொட்டித்தண்ணீரில் மூழ்கி உயிரிழக்க வாய்ப்பில்லை என்று கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் வேதனை தெரிவித்தனர்.
இதுகுறித்து கல்லூரி தரப்பில் விசாரித்த போது சம்பவத்தன்று மாணவர் அருண் பல்லவ், சக மாணவர்களுடன் தண்ணீர் தொட்டியில் இறங்கி குளித்ததாகவும், விவசாய பயன்பாட்டுக்காக தண்ணீர் தேக்கி வைக்கப்பட்ட தொட்டியில் 15 அடி ஆழத்துக்கு தண்ணீர் இருந்த நிலையில் ஒருவர் மீது ஒருவர் விளையாட்டு வாக்கில் ஏறிகுதித்த போது அருண்பல்லவ் நீரில் மூழ்கியதாகவும், அவருடன் குளித்த மாணவர்களால் அவரை காப்பாற்ற இயலாததால், நன்கு நீச்சல் தெரிந்த சீனியர் மாணவர்களை அழைத்து வந்து அருண்பல்லவை போராடி மீட்டதாகவும் அதற்குள்ளாக அவர் உயிரிழந்து விட்டதாகவும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நன்றாக நீச்சல் தெரிந்த மாணவர் எப்படி நீரில் மூழ்கி இருப்பார்? நீருக்குள் வைத்து அழுத்தி விளையாடினார்கள் என்றால் மாணவர் அருண்பல்லவ்வை நீருக்குள் வைத்து அழுத்திய மாணவர் யார்? விவசாய பயன்பாட்டுக்கு உள்ள அழமான தண்ணீர் தொட்டியில் மாணவர்களை எப்படி குளிக்க அனுமதித்தீர்கள்? மாணவர்களை உங்களை நம்பித்தானே கல்லூரியில் விட்டு வருகிறோம் அவர்களின் பாதுகாப்புக்கு நீங்கள் தானே பொறுப்பு? என்று கேள்வி எழுப்பி உள்ள மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தங்கள் வீட்டு பிள்ளையின் மர்ம மரணத்துக்கு நீதி கிடைக்கும் வரை அவரது சடலத்தை வாங்க போவதில்லை என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பரபரப்பு நிலவியதால் கல்லூரியில் 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபட்டனர். மாணவனின் உயிரிழப்புக்காண காரணம் குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பல மாணவர்கள் தங்கி பயில கூடிய விடுதி வளாகத்தில், மூடப்பட்டு இருந்திருக்க வேண்டிய தண்ணீர் தொட்டியை, அஜாக்கிரதையாக மூடாமல் வைத்திருந்ததும், அதன் அருகில் செல்ல மாணவர்களை அனுமதித்து வந்ததும், தங்கள் பிள்ளையின் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்துவிட்டதாக, அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
கல்லூரி நிர்வாகத்தின் மீது வழக்குப்பதியப்படும் என போலீசார் உறுதி அளித்த நிலையில், பெற்றோர், உறவினர்கள், போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.