​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஈரடுக்கு சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்து விபத்து... 22 பேர் பலி..!

Published : May 08, 2023 2:45 PM

ஈரடுக்கு சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்து விபத்து... 22 பேர் பலி..!

May 08, 2023 2:45 PM

22 பேர் உயிரிழந்த கேரளா மலப்புரம் படகு விபத்து தொடர்பாக படகின் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். படகில் 40 பேர் பயணச் சீட்டு பெற்று சென்ற நிலையில், மேலும் சிலர் நின்று கொண்டு சென்றதாக கூறப்படுவதால், அவர்கள் எங்கே என்ற தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தூவல்தீரம் கடற்கரையில் 40க்கும் மேற்பட்டோரும் சென்றுக் கொண்டிருந்த ஈரடுக்கு சுற்றுலா படகு, நேற்றிரவு 7.30 மணியளவில் கழிமுக பகுதியில் திடீரென கவிழ்ந்ததில் அதில் பயணித்த அனைவரும் நீரில் மூழ்கினர்.

தகவல் அறிந்த மீட்புப் படையினருடன் உள்ளூர் மக்களும் மீட்புப் பணியை தொடங்கினர். நீரில் தத்தளித்த 8 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், இரவு பகலாக தொடர்ந்த தேடுதல் பணியில் 22 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் 9 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த படகில் 40 பேர் டிக்கெட் வாங்கி பயணித்துள்ளனர். அவர்களைத் தவிர சிலர் டிக்கெட் வாங்காமல் மேலடுக்கில் நின்ற படி பயணித்ததாக கூறப்படும் நிலையில், அவர்களின் நிலை என்ன ஆனது? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய கடற்படையின் சேடக் ஹெலிகாப்டரின் உதவியுடன் நீரில் மூழ்கி மாயமானவர்களை, தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்ட இடத்தை பார்வையிட்ட கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மீட்கப்பட்டு சிகிச்சை பெறுவோரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார்.

விபத்துக்குள்ளான இந்த படகுக்கு, சுற்றுலா படகுகளுக்கு வழங்கப்படும் தகுதிச் சான்று பெறப்படவிலை என்பதும், அனுமதியின்றி மாலை 5 மணிக்கு மேல் படகு இயக்கப்பட்டதும், அதில் பயணித்தவர்களுக்கு லைஃப் ஜாக்கெட் வழங்கப்படவில்லை என்பதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

படகு உரிமையாளரான தானூரைச் சேர்ந்த நாசர், மீன்பிடி படகை சுற்றுலா படகாக மாற்றியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்றதால் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படும் நிலையில், படகு உரிமையாளர் மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவான அவரை தேடி வருகின்றனர். படகு உரிமையாளரின் சகோதரரையும், நண்பரையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு சார்பில் 10 லட்சம் ரூபாயும், மத்திய அரசு சார்பில் 2 லட்சம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது, இச்சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.