உலக உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் 2 லட்சம் பாலஸ்தீனியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உணவு உதவி அடுத்த மாதம் முதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது பாலஸ்தீனத்தில் உணவு உதவியை பெற்று வருவோரின் எண்ணிக்கையில் 60 சதவீதமாகும்.இதுகுறித்து பேசிய உலக உணவுத் திட்டத்தின் பாலஸ்தீன பகுதிக்கான அதிகாரி சமீர் அப்துல் ஜப்பார், கடும் நிதிப் பற்றாக்குறை காரணமாக வலி மிகுந்த முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்தாகத் தெரிவித்தார்.
வறுமை அதிகமாக இருக்கும் மேற்குக் கரை மற்றும் காஸா பகுதி மக்களுக்கு ஐநா அமைப்புகளின் சார்பில் ஒவ்வொருவருக்கும் மாதம் ஒன்றிற்கு 10.30 டாலர் மதிப்பிலான வவுச்சர் மற்றும் உணவு உதவி வழங்கப்படுவதாக பாலஸ்தீனிய மற்றும் ஐநா பதிவுகள் தெரிவிக்கின்றன.
மேலும் காசாவில் வசிக்கும் 2.3 மில்லியன் மக்களில் 45 விழுக்காடு பேர் வேலையில்லாமல் இருப்பதோடு 80 சதவீதம் பேர் சர்வதேச உதவியை எதிர்நோக்கிக் காத்திருப்பதாகவும் அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.