வாழ்த்து வாங்க வந்தாப்பா... ஒரேடியா போயிட்டாப்பா... மகளின் பிரிவால் தாய் கண்ணீர்..! விபத்தில் சிக்கிய Uber பைக்
Published : May 07, 2023 9:06 PM
வாழ்த்து வாங்க வந்தாப்பா... ஒரேடியா போயிட்டாப்பா... மகளின் பிரிவால் தாய் கண்ணீர்..! விபத்தில் சிக்கிய Uber பைக்
May 07, 2023 9:06 PM
பிறந்த நாள் அன்று தாயிடத்தில் வாழ்த்து பெறுவதற்காக, uber பைக்கில் சென்ற பெண் அதிவேக லாரி மோதியதில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த 39 வயதான சேவிகா . தனியார் தொலைக்காட்சி ஒன்றில் மேக்கப் ஆர்டிஸ்டான இவர் மாம்பலத்தில் தனது தோழியுடன் அறை எடுத்து தங்கி வேலைபார்த்து வந்தார். தனது பிறந்த நாளை ஒட்டி சென்னை வியாசர்பாடியில் உள்ள தனது தாயாரிடத்தில் வாழ்த்து பெறுவதற்காக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டார்.
பைக் டாக்ஸி சேவை அளித்து வரும் Uber ல் புக் செய்து அந்த பைக்கில் பின்னால் அமர்ந்து பயணித்துள்ளார். தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம் அருகே வந்து கொண்டிருந்தபோது அதிவேகத்தில் வந்த டிப்பர் லாரி மோதி சேவிகா தூக்கி வீசப்பட்டார் .
சம்பவ இடத்துக்கு வந்த தேனாம்பேட்டை காவல் துறையினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த சேவிகாவை மீட்டு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சேவிகாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்து விட்டனர்.
சேவிகாவை அழைத்துச் சென்ற பைக் டாக்ஸி ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். மகள் உயிரிழந்த தகவல் அறிந்து கதறியபடியே ஓடி வந்த சேவிகாவின் தாய் தனது மகள் அணிந்திருந்த ஷூக்களை கட்டிப்பிடித்தபடி கதறி அழுதார்
தன் மகள் பிறந்த நாளுக்கு ஆசீர் வாதம் வாங்க வர்ரேன்னு சொன்னாளப்பா.. போயிட்டாளப்பா என்று சேவிகாவின் தாய் தனது மகளின் பிரிவை தாங்கிக் கொள்ள இயலாமல் கலங்கி கண்ணீர் சிந்தினார்
குடும்பத்தில் சொத்துப்பிரச்சனை நிலவி வந்ததால் தனியாக அறையில் தங்கிய சேவிகா விபத்தில் உயிரிழந்த நிகழ்வு குறித்து விரிவான விசாரணை நடத்திவரும் போலீசார் விபத்துக்கு காரணமான லாரியையும், லாரி ஓட்டுநரையும் தேடி வருகின்றனர்.
சென்னையில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கல் மற்றும் மணல் ஏற்றிச்செல்லும் டிப்பர் லாரிகள் தங்குதடையின்றி அளவுக்கதிகமான பாரத்துடன், அதிவேகத்தில் இயக்கப்படுவதாகவும், இதன் காரணமாகவே இப்படிப்பட்ட கோர விபத்துக்கள் நிகழ்வதாகவும் வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.