​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தந்தையை கவனிக்காத ஊதாரி புள்ளையின் ரூ.13 கோடி சொத்து ஊ..ஊ.. பத்திரப்பதிவை ரத்து செய்து ஆபிஸர் அதிரடி..!

Published : May 06, 2023 6:20 PM



தந்தையை கவனிக்காத ஊதாரி புள்ளையின் ரூ.13 கோடி சொத்து ஊ..ஊ.. பத்திரப்பதிவை ரத்து செய்து ஆபிஸர் அதிரடி..!

May 06, 2023 6:20 PM

படுக்கையில் கிடக்கும் தந்தையை கவனிக்காத மகனுக்கு எழுதி கொடுக்கப்பட்ட சுமார் 13 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களின் பத்திர பதிவை அதிரடியாக ரத்து செய்த பத்மநாபபுரம் சார் ஆட்சியர் கவுசிக், அந்த பத்திரத்தை படுக்கையில் இருக்கும் ஓய்வுப்பெற்ற ஆசிரியரிடம் வழங்கினார்...

சார்பட்டா பரம்பரை சினிமாவை பாருல, நான் தான் அந்த சார்பட்டா பரம்பரை என அரை நிர்வாணத்துடன் போதையில் அலப்பறை செய்யும் இவர் தான் தந்தையை கவனிக்காததால் சொத்தை பறிகொடுத்த டைட்டஸ்.

கன்னியாகுமரி மாவட்டம் அழகன்பாறையைச் சேர்ந்த 75 வயதான ஓய்வுப்பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் ஜான் தாமஸ். இவருக்கு கிரிஜா என்ற மகளும் டைட்டஸ் என்ற மகனும் உள்ளனர். கிரிஜா திருமணமாகி கணவருடன் சென்னையில் வசித்து வருகிறார். வெளிநாட்டில் டிரைவர் வேலைப்பார்த்து வந்த மகன் டைட்டஸுக்கும் திருமணம் செய்து வைத்தார். 2004-ம் ஆண்டு ஜான் தாமஸ் பணி ஓய்வு பெற்ற நிலையில் 2010-ம் ஆண்டு பக்கவாத நோயால் படுத்த படுக்கையானார்.

மனைவி தாய்கனி கணவரை பராமரித்து வந்த நிலையில், வெளி நாட்டில் இருந்து ஊர் திரும்பிய டைட்டஸ் மதுபோதைக்கு அடிமையானார். மகனின் வற்புறுத்ததால் தனது பெயரில் இருந்த, சுமார் 13 கோடி ரூபாய் மதிப்பிலான வீடு மற்றும் 1 ஏக்கர் 36 சென்ட் நிலத்தை 2017-ம் ஆண்டு செட்டில்மென்ட் ஆவணமாக எழுதி கொடுத்தார் ஜான்தாமஸ். சொத்துக்களை எழுதி வாங்கிய டைட்டஸ் பெற்றோரை சரிவர பராமரிக்காததோடு, தினமும் மது குடித்துவிட்டு தகராறிலும் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், ஜான் தாமஸின் மனைவிக்கும் உடல்நல குறைபாடு ஏற்படவே, சகோதரர் டைட்டஸ் பெற்றோரை பராமரிக்காமல் ஊதாரியாக சுற்றியதால், தனது தாய் தந்தையை பராமரிக்க ஒரு தன்னார்வலரை ஏற்பாடு செய்தார் மகள் கிரிஜா. டைட்டஸின் தொல்லை தாங்க முடியாமல் அவரது மனைவி தாய் வீட்டிற்குச் சென்று விட்டார்.

கடந்த ஆண்டு தாய்க்கணி உயிரிழந்த நிலையில் குடிபோதையில் வீட்டிற்கு வரும் டைட்டஸ் படுக்கையில் இருக்கும் தந்தை ஜான் தாமஸ் மற்றும் அவரை கவனித்துக் கொள்ளும் தன்னார்வவலரிடம் தகாராறில் ஈடுபடுவதை வாடிக்கையாக்கியதாக கூறப்படுகிறது.

மகனின் செயல் வெறுப்பை ஏற்படுத்தவே, தான் எழுதி கொடுத்த சொத்து ஆவணங்களை ரத்து செய்ய வேண்டுமென, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் கவுசிக்கிடம் தன்னார்வலர் மூலமாக புகாரளித்தார் ஜான்தாமஸ்.

விசாரணையில், புகாரில் கூறியது உண்மையென தெரிய வந்ததால் உடனடி நடவடிக்கையில் இறங்கினார் சார் ஆட்சியர் கவுசிக். ஆசிரியர் ஜான் தாமஸ் அவரது மகன் டைட்டஸ் பெயருக்கு எழுதி கொடுத்திருந்த பத்திர பதிவை, பெற்றோர் முதியோர் பராமரிப்பு சட்டத்தின் கீழ் அதிரடியாக ரத்து செய்தார். ரத்து செய்யப்பட்ட உத்தரவை ஜான்தாமஸ் வீட்டிற்கேச் சென்று நேரடியாக வழங்கினார் கவுசிக்.

பாசத்தோடு வளர்த்த தாய்-தந்தையை தவிக்க விட்டு முழு நேர குடிகாரராக மாறி மதுப்புட்டிகளை கட்டிக் கொண்டு சுற்றும் ஊதாரி புள்ளைகளுக்கு இந்த சம்பவம் மற்றும் ஒரு எச்சரிக்கை.