பிரிட்டன் மற்றும் ஏனைய 14 காமன்வெல்த் நாடுகளின் மன்னராக மூன்றாம் சார்லஸ் முறைப்படி முடிசூட்டப்பட்டார். 2 ஆயிரத்து 200 விருந்தினர்கள் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவால் லண்டன் மாநகரமே விழாக்கோலம் பூண்டது.
பிரிட்டனின் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் வயது மூப்பால் தமது 96-வது வயதில் கடந்த ஆண்டு காலமானார். இதையடுத்து அவரது மூத்த மகன் 3-ஆம் சார்லஸ் மன்னராக உடனடியாக அறிவிக்கப்பட்டார்.
1953ஆம் ஆண்டிற்கு பிறகு பிரம்மாண்டமாக முடிசூட்டு விழாவை நடத்த லண்டனில் முழு அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 10 ஆயிரம் ராணுவ வீரர்கள் மற்றும் 12 ஆயிரம் போலீசார் என லண்டன் நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
விழாவில் உலக நாடுகளின் தலைவர்கள், பிரபலங்கள் என 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்தியா சார்பில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்றார்.
விழாவிற்கு முன்னதாக இசைக்கலைஞர்கள் உற்சாகமாக இசை நிகழ்ச்சிகளை நடத்தினர்.
பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து குதிரைப்படை சூழ தங்க குதிரை வண்டியில் 3ஆம் சார்லசும், அவரது மனைவி கமிலாவும் விழா நடைபெறும் வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்திற்கு அழைத்துவரப்பட்டனர். இசைக்கருவிகள் முழங்க தேவாலயத்திற்கு சார்லசும், கமிலாவும் வருகை தந்தனர். அதேபோல், கிரீடமும் முழு அரச மரியாதையுடன் தேவாலயத்துக்கு எடுத்து வரப்பட்டது.
விழாவில் இளவரசர் வில்லியம் அவரது மனைவி கேட், மற்றொரு இளவரசர் ஹாரியும் பங்கேற்றனர். ஹாரியின் மனைவி மெகன் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
இதனைத் தொடர்ந்து தேவாலயத்தில் பிரிட்டன் பிரதமர் ரிசி சுனக் பைபிளை வாசித்தார். பின்னர் முடிசூட்டுவதற்கான உறுதிமொழியை மூன்றாம் சார்லஸ் ஏற்றுக்கொண்டார். தமது ஆட்சியில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவேன் என உறுதி மொழி ஏற்றுக்கொண்டு கையொப்பமிட்டார்.
பின்னர், God save the King பாடல் இசைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தங்க அங்கி அணிந்த மூன்றாம் சார்லஸ் அரியணையில் அமரவைக்கப்பட்டார். பின்பு, 1661ம் ஆண்டு உருவாக்கப்பட்ட, புனித எட்வர்ட் மணிமகுடம் அணிவிக்கப்பட்டு மன்னராக சார்லஸ் முடிசூட்டப்பட்டார். அவரிடம் செங்கோலும் ஒப்படைக்கப்பட்டது.
அவரைத் தொடர்ந்து பிரிட்டன் ராணியாக கமிலாவும் முடிசூட்டப்பட்டார். வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் மன்னர் 3ம் சார்லஸ்க்கு முடிசூட்டப்பட்டதும், 6 குண்டுகள் முழங்க மரியாதை அளிக்கப்பட்டது.