நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யும் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும், மோசடியில் ஈடுபடும் நிதி நிறுவனங்களை கண்காணிக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில், காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது இதுகுறித்து கேள்வி எழுப்பிய சட்டமன்ற உறுப்பினர் தளி ராமச்சந்திரனுக்கு பதிலளித்த முதலமைச்சர், ஆருத்ரா மோசடி வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், அவர்களின் 93 அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதே போல் சுமார் 16 மோசடி நிறுவனங்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், பொதுமக்களின் பணத்தை திருப்பி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார்.