புதுச்சேரியில் அதிக லாபம் கிடைக்கும் என நம்பி, டெலிகிராம் செயலியில் வந்த லிங்க் வழியே ஆன்லைன் போட்டியில் பங்கேற்ற பெண் ஒருவர் எட்டரை லட்ச ரூபாயை இழந்துள்ளார்.
ரெட்டியார் பாளையத்தைச் சேர்ந்த மரியலூவியா என்ற அந்தப் பெண், லிங்க்குக்குள் சென்று முதலில் 30 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்துள்ளார்.
டாஸ்குகள் முடிக்கப்பட்டவுடன் 43 ஆயிரத்து 699 ரூபாய் கிடைத்துள்ளது. குஷியான அவர், அடுத்தடுத்து சுமார் 8 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் வரை முதலீடு செய்து போட்டியில் டாஸ்க்குகளை முடித்துள்ளார்.
அதற்குண்டான லாப பணம் கணக்கில் வந்துவிட்டது போல் குறுஞ்செய்தி வந்துள்ளது. ஆனால் பணத்தை எடுக்க முடியவில்லை.
லிங்க்கை அனுப்பிய நபரிடம் அதுகுறித்து கேட்டபோது, நீங்கள் மேலும் பணம் முதலீடு செய்தால்தான் பணத்தை எடுக்க முடியும் என தெரிவித்துள்ளான்.
அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து உஷாரான மரியலூவியா, சைபர் கிரைம் போலீசில் புகாரளித்துள்ளார்.
டெலிகிராம் வாட்ஸ் அப் பேஸ்புக் இன்ஸ்டாகிராமில் வருகின்ற லிங்கில் பணத்தை செலுத்தி ஏமாறவேண்டாம் என புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.