கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தேவபாண்டலத்தில், சாதி பெயரைச் சொல்லி மிரட்டல் விடுக்கப்படுவதாக கர்ப்பிணி ஒருவர், வளைகாப்பு முடிந்த கையோடு கணவனுடன் காவல்நிலையம் சென்று புகாரளித்தார்.
கல்பனா என்ற அந்தப் பெண்ணும் அதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரும் 5 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர்.
இருவேறு சமூகங்களை சேர்ந்தவர்களாயினும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இருப்பினும் வெங்கடேசனின் சித்தப்பாவான செல்வம் என்பவர் மட்டும் கல்பனாவை ஏற்றுக் கொள்ளாமல், அவ்வப்போது சாதிப் பெயரைச் சொல்லி வசைபாடி வந்தார் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக வெங்கடேசன் தனது சித்தப்பாவை கண்டித்து வந்துள்ளார். இந்நிலையில், 7 மாத கர்ப்பிணியான கல்பனாவுக்கு அங்குள்ள சமுதாயக் கூடத்தில் வளைகாப்பு நடைபெற்றுள்ளது.
வளைகாப்பை முடித்துக் கொண்டு அவர் வீடு திரும்பும் வழியில் செல்வம் பள்ளம் தோண்டி வைத்தார் என்று கூறப்படுகிறது.
இதனால் மீண்டும் தகராறு ஏற்படவே, பொறுக்கமுடியாத கல்பனா, வளைகாப்பு அலங்காரத்துடன் நேராக காவல் நிலையம் சென்று செல்வம் மீது புகாரளித்தார்.