வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படவில்லை.. அச்சம் வேண்டாம் - அரசு நம்பிக்கை..!
Published : Mar 03, 2023 9:51 PM
வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படவில்லை.. அச்சம் வேண்டாம் - அரசு நம்பிக்கை..!
Mar 03, 2023 9:51 PM
தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வட மாநிலங்களில் பரப்பப்படும் வீடியோ போலியானது என்று தமிழக காவல்துறை அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் தெரிவித்துள்ளார்...
பீகார் மாநில முதல் அமைச்சர் நிதிஷ்குமார், தமிழ்நாட்டில் பணியாற்றும் பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டு வருவதாக பத்திரிகை செய்திகள் மூலம் அறிந்ததாகவும், இதுதொடர்பாக தமிழ்நாட்டு அதிகாரிகளுடன் பேசி, அங்கு பணியாற்றும் பீகார் மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கேட்டுக் கொண்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார் . இதனிடையே தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற 2 வீடியோக்கள் அங்குள்ள சமூக வலைதளங்களில் வைரலானது.
தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வைரலாகும் வீடியோக்கள் போலியானது என்றும் இது போன்ற வீடியோக்களை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு புரியும் வகையில் இந்தி மொழியில் தமிழக காவல்துறை அறிவிப்பும் வெளியிட்டது.
தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் எவருக்கும் எந்த வித அச்சுறுத்தலும் இல்லை என்றும் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக விஷமத்தனமான செய்தி பகிரப்பட்டு வருவதாகவும் தொழில் அமைதிக்கும் சமூக அமைதிக்கும் எப்போதும் பெயர் பெற்று விளங்கும் தமிழ் நாட்டில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றதாக செய்தி பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையே சென்னை எம்.ஜி.ஆர் செண்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.
வட மாநிலங்களில் பரவும் போலி வீடியோக்களை நம்பி சென்னையில் 16 வருடங்களாக டீக்கடையில் வேலைபார்த்து வந்த தொழிலாளர் ஒருவர் தங்கள் குழுவுடன் சொந்த ஊருக்கு செல்வதாக கூறினார்.
ஆனால் பெரும்பாலான தொழிலாளர்கள் வருகிற மார்ச் மாதம் 8 ந்தேதி கொண்டாடப்படும் ஹோலி பண்டிகையில் பங்கேற்க சொந்த ஊருக்கு செல்வதாக தெரிவித்தனர்.