​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விபத்து ஏற்படுத்திய காரை திருடிச்சென்ற லாங் டிரைவ் மாமாகுட்டிக்கு மாவுக்கட்டு.. ரூ.26,000க்கு டஸ்டர் கார் விற்பனை..!

Published : Mar 02, 2023 6:17 PM



விபத்து ஏற்படுத்திய காரை திருடிச்சென்ற லாங் டிரைவ் மாமாகுட்டிக்கு மாவுக்கட்டு.. ரூ.26,000க்கு டஸ்டர் கார் விற்பனை..!

Mar 02, 2023 6:17 PM

சென்னை அடுத்த கேளம்பாக்கம் அருகே விபத்து ஏற்படுத்திய ஐ.டி நிறுவன ஊழியரை தாக்கி 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டஸ்டர் காரை திருடிச்சென்று 26 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற ரவுடியை, காதலியுடன் போலீசார் கைது செய்தனர். காதலியுடன் லாங்டிரைவ் சென்றவர் வழியில் காரை திருடியதால் போலீசில் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

சென்னை சித்தாலப்பாக்கத்தை சேர்ந்த ஐ.டி ஊழியர் ராஜாலிங்கம் . இவர் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 18ம் தேதி மாமல்லபுரம் சென்று விட்டு தனது டஸ்டர் காரில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். கேளம்பாக்கம் அருகே வந்த போது இளைஞர் ஒருவர் ஓட்டிச்சென்ற பைக் மீது காரை மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகின்றது.

ராஜலிங்கத்தின் காரை, பைக்கில் விரட்டிச்சென்ற சம்பந்தப்பட்ட இளைஞர், தன்னுடன் வந்த பெண்ணுக்கு காயம் ஏற்பட்டதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த தாடி வைத்த இளைஞர் ஒருவர் பிரச்சனையை தீர்ப்பது போல நடித்து , ராஜலிங்கத்தை தாக்கி உள்ளார். காயம் பட்ட பெண்ணை முதலில் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லுமாறு கூறிய அவர், காரை தான் கேளம்பாக்கம் காவல் நிலையம் கொண்டு செல்வதாக கூறியுள்ளார்.

இதையடுத்து ராஜலிங்கம் காரை அவனிடம் கொடுத்து விட்டு, காயம் பட்ட பெண்ணை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் கேளம்பாக்கம் காவல் நிலையம் சென்று விசாரித்த போது காரை தாங்கள் எடுத்து வரவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். விபத்தை பயன்படுத்தி யாரோ மர்ம ஆசாமி காரை திருடிசென்றது தெரியவந்தது.

இதையடுத்து கேளம்பாக்கம் போலீசார் 2 தனிப்படை அமைத்து கார் திருடனை தேடி வந்தனர். கடந்த 5 மாதங்களாக கேளம்பாக்கம், மாமல்லபுரம், மேலகோட்டையூர் உள்ளிட்ட இடங்களில் பொறுத்தப்பட்டுள்ள 250க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் டஸ்டர் காரை திருடிச்சென்றது ரவுடி முரளி என்பதை கண்டறிந்தனர்

ரவுடி முரளி தனது காதல் மனைவி சங்கீதாவுடன் மாமல்லபுரம் வரை லாங் டிரைவ் சென்று விட்டு திரும்பிய போது, வழியில் டஸ்டர் காரை முரளி ஏமாற்றி எடுத்துச்சென்றதாகவும் முட்டுகாடு பகுதியில் பதுங்கியிருந்த முரளியை பிடிக்க சென்ற போது தப்பி ஓடிய அவர் சறுக்கி விழுந்ததால் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். இரண்டு கொலை, ஒரு கொலை முயற்சி , திருட்டு , வழிப்பறி உள்ளிட்ட 13க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி முரளியை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று முறிந்த கைக்கு மாவு கட்டு போட்டு காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டஸ்டர் காரை,  ரவுடி லெனின் என்பவனிடம் வெறும் 26 ஆயிரம் ரூபாய்க்கு முரளி விற்றதாகவும், அந்த கார் பலரது கைக்கு மாறி இறுதியாக தூத்துக்குடியில் உள்ள ஒருவரின் போலியான வாகன பதிவு எண்ணுடன் சென்னையில் இயக்கப்பட்ட நிலையில்  மீட்கப்பட்டதாக தெரிவித்த போலீசார், இந்த திருட்டுக்கு உடந்தையாக இருந்த ரவுடி முரளியின் காதல் மனைவி சங்கீதாவையும் கைது செய்தனர்.

காதலியுடன் லாங்டிரைவ் போன மாமாகுட்டி ரவுடி, திருட்டில் ஈடுபட்டதால் மாவுக்கட்டுடன் கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.