​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கந்து வட்டியா கேட்குறீங்க ? போராட்டத்தால் போலீசுக்கு பாடம் சொன்ன பெண்..! திரு.. திரு.. தீவட்டிப்பட்டி போலீஸ்

Published : Mar 02, 2023 6:24 AM



கந்து வட்டியா கேட்குறீங்க ? போராட்டத்தால் போலீசுக்கு பாடம் சொன்ன பெண்..! திரு.. திரு.. தீவட்டிப்பட்டி போலீஸ்

Mar 02, 2023 6:24 AM

கந்துவட்டி கேட்டு வீட்டை பூட்டி அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளாமல், பணம் கொடுக்க சொன்ன போலீசாரைக் கண்டித்து, பெண் ஒருவர் குடும்பத்துடன் ஓமலூர் நீதிமன்றம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகேயுள்ள மூங்கிலேரிபட்டி காலனியை சேர்ந்தவர்கள் பால்ராஜ் - மரகதம் தம்பதி. இவர்கள் கொங்குபட்டியை சேர்ந்த ராமன் என்பவரிடம் தங்கள் வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து 9 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளனர்.

6 1/2 லட்சம் ரூபாய் பணத்தை செலுத்திய நிலையில் மீதம் உள்ள பணத்தை கட்டுவதில் சுனக்கம் ஏற்பட்டதால் கால அவகாசம் கேட்டதாக கூறப்படுகின்றது. இதையடுத்து வட்டிக்கு வட்டி போட்டு கூடுதல் பணம் கேட்டதாகவும், அதனை கொடுக்க மறுத்ததால் வீட்டைப் பூட்டியதாகவும் கூறப்படுகின்றது.

இதையடுத்து மரகதம் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் கந்துவட்டி குறித்து புகார் அளித்துள்ளார். காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தகுமார், கடனை திருப்பிக் கொடு, வீட்டை திறக்க சொல்கிறேன் என்று கூறி பஞ்சாயத்து செய்ததாக கூறப்படுகின்றது. இதையடுத்து ஆவேசமான மரகதம் தனது தாய் மற்றும் பள்ளி செல்லும் தனது மகளுடன் ஓமலூர் நீதிமன்ற வாசலுக்கு வந்து உடலில் மண்ணெண்னை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்கபோவதாக கூறி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தீக்குளிக்க முயன்றவர்கள் மீது தண்ணீரை ஊற்றி போலீசார் தடுத்தனர்.தனது புகாரின் பேரில் தீவட்டிப்பட்டி போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை, தனக்கு நீதி வேண்டும் என்று கேட்டு நீதிமன்ற வாசலில் அமர்ந்து கொண்டு மரகதம் குடும்பத்தினர் அபயக்குரல் எழுப்பினர்.

வழக்கறிஞர்கள் மற்றும் போலீசார் சமாதானப்படுத்தி மரகதம் குடும்பத்தினரை அங்கிருந்து அப்புறப்படுத்தியதோடு, அவரது புகார் மீது நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்து அழைத்துச்சென்றனர். அதன்படி பைனான்ஸியர் ராமனிடம் இருந்து சாவியை வாங்கி, வீட்டை திறந்து அதில் மரகதம் குடும்பத்தினரை அமர வைத்தனர்.

மரகதத்திற்கு வீட்டை அடமானம் பெற்று கடன் கொடுத்த ராமன், வேறு ஒருவரிடம் கடன் வாங்கி , இவருக்கு கூடுதல் வட்டிக்கு பணம் கொடுத்ததாகவும், பணம் திரும்ப வராததால் வீட்டை பூட்டி உள்ளார் என்றும் தெரிவித்த காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார், கடன் கொடுத்தவரை மிரட்டுவதற்காகவே தீக்குளிப்புப் போராட்டம் நடத்தப்பட்டதாக கூறினார்.

ஏற்கனவே தீவட்டிப்பட்டி போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று செவ்வாய்கிழமை ஓமலூர் நீதிமன்ற வாசலில் அமர்ந்து லாரி உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வெற்றி கண்ட நிலையில், புதன்கிழமை பெண் ஒருவர் நீதிமன்ற வாசலில் அமர்ந்து போராடி பூட்டிய வீட்டை மீட்டு உள்ளது குறிப்பிடதக்கது.