நாட்டின் 74ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியேற்றினார். கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடனும், பல்வேறு துறைகளின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்புடனுடன் குடியரசு தின நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
சென்னையில் குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் ஆண்டு தோறும் மெரினா கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகே நடைபெற்று வந்த நிலையில், மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக இந்த ஆண்டு உழைப்பாளர் சிலை முன் நடைபெற்றது. காலை 8 மணியளவில் குடியரசு தின கொண்டாட்டத்தில் பங்கேற்க வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை வரவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,முப்படை அதிகாரிகள், காவல்துறை உயர்அதிகாரிகளை ஆளுநருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர், ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கொடியேற்றி வைத்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் மூலம் தேசியக்கொடி மீது மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதையடுத்து, முப்படைகள் வீரர்களின் அணிவகுப்பும், ராணுவம், சி.ஆர்.பி.எப். உள்ளிட்டோரின் கூட்டுக் குழல் முரசிசை அணிவகுப்பும் நடைபெற்றது.
தமிழ்நாடு காவல்துறையின் ஆயுதப்படைப்பிரிவு, பேரிடர் நிவாரணப்படை பிரிவு, மகளிர் சிறப்பு காவல்படை உள்ளிட்டவற்றின் கண்கவர் அணிவகுப்பும் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து, வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கத்தை அரசு ஊழியர் பிரிவில் 2 பேருக்கும், பொதுமக்கள் பிரிவில் 3 பேருக்கும் முதலமைச்சர் வழங்கி கவுரவித்தார். 5 காவலர்களுக்கு காந்தியடிகள் காவலர் பதக்கமும் வழங்கப்பட்டது. சிறந்த காவல் நிலையங்களுக்கான பிரிவில், திருப்பூர் வடக்கு காவல்நிலையம் முதல் பரிசையும், திருச்சி கோட்டை காவல்நிலையம் 2வது பரிசையும், திண்டுக்கல் தாலுகா காவல் நிலையம் 3-வது பரிசையும் பெற்றது.
பின்னர், நடைபெற்ற கண்கவர் கலைநிகழ்ச்சிகளை ஆளுநர் ஆர்.என்.ரவியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அருகருகே அமர்ந்து கண்டு ரசித்தனர்.
தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் மயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான நடன நிகழ்ச்சிகளும் உற்சாகமாக நடைபெற்றன.
தஞ்சை தென்னகப் பண்பாட்டு மையம் சார்பில் ராஜஸ்தானின் கல்பேலியா நடனம், மகாராஷ்டிராவின் கோலி நடனம், அசாமின் பகுரும்பா நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் உற்சாகமாக நடந்தது.
பின்னர், நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் அலங்கார ஊர்திகள் அணிவகுத்து வந்தன. காவல்துறை, செய்திமக்கள் தொடர்புத்துறை, விளையாட்டுத்துறை, கூட்டுறவுத்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் ஊர்திகளின் அணிவகுப்பும் நடைபெற்றது.
சுகாதாரத்துறையின் 108 ஆம்புலன்ஸ் வடிவ ஊர்தி, சுற்றுலாத்துறையின் திருவள்ளுவர் சிலை கொண்ட ஊர்தி போன்றவை பார்வையாளர்களை கவர்ந்தது.