மஃப்டி.. மப்பு.. மாமூல்.. ரூ.1500 பைன் போட்ட எஸ்.ஐ அமெரிக்கா வரை நீளும் வாய்..! விசாரணைக்கு உயர் அதிகாரிகள் உத்தரவு.!
Published : Jan 25, 2023 5:51 PM
மஃப்டி.. மப்பு.. மாமூல்.. ரூ.1500 பைன் போட்ட எஸ்.ஐ அமெரிக்கா வரை நீளும் வாய்..! விசாரணைக்கு உயர் அதிகாரிகள் உத்தரவு.!
Jan 25, 2023 5:51 PM
500 லஞ்சம் கொடுக்க மறுத்த சரக்கு வாகன ஓட்டுனருக்கு, நோ பார்க்கிங் என்று 1500 ரூபாய் அபராதம் போடப்பட்டதாக போக்குவரத்து உதவி ஆய்வாளர் மீது புகார் எழுந்துள்ளது
சென்னை பொழிச்சலூர் கணேஷ் மஹால் எதிரில் ஓரமாக சரக்கு வண்டி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அங்கு சாதாரண உடையில் இருசக்கர வாகனத்தில் வந்த போக்குவரத்து எஸ்.ஐ வில்சன் என்பவர்
சரக்கு வாகன ஓட்டுனரிடம் 500 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகின்றது.
அதற்கு அந்த ஓட்டுனரோ, போக்குவரத்துக்கு இடையூறின்றி. தனது வாகனத்தை சாலையோரம் நிறுத்தி சரக்கு ஏற்றிக் கொண்டிருக்கிறோம், இரவு நேரம் என்பதால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சாலையில் எந்த வண்டியும் இல்லை நான் ஏன் பணம் தரவேண்டும் என்று எதிர்கேள்வி கேட்டுள்ளார்.
சீருடை அணியாமல் தள்ளாடியபடி நின்ற ஆர்.எஸ்.ஐ வில்சனோ, யூனிபார்ம் இல்லன்னாலும் , போலீஸ் பவரை காட்டுவதாக கூறி அபராத எந்திரத்தை எடுத்து வந்து சாலையோரம் நின்ற அந்த சரக்கு வாகனத்துக்கு நோ பார்க்கிங் என்று குறிப்பிட்டு 1500 ரூபாய் அபராதம் விதித்தார்
நீங்களே குடி போதையில் உள்ளீர்களே வாகனம் ஓட்டலாமா ? என்று கேட்டதற்கு இரு முறை வாயை கொப்பளித்து தான் மது அருந்தவில்லை என்பது போல நடித்தார்
தன்னை வீடியோ எடுப்பதை பார்த்ததும் தள்ளாடியபடியே வில்சன் தனது இரு சக்கர வாகனத்தை ஓட்டிச்சென்றதாக சரக்கு வாகன ஓட்டுனர் , வியாபாரி சங்க நிர்வாகிகள் மூலம் காவல் உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார்
இது குறித்து விளக்கம் அளித்த ஆர்.எஸ்.ஐ. வில்சன், தனது சாதியின் பெருமை குறித்து பேசியதோடு, தான் 53 ஆண்டுகளாக அதே பகுதியில் வசிப்பதாக கூறினார்
தொடர்ந்து அமெரிக்க சூப்பர்ஸ்டார் அர்னால்டு போக்குவரத்து விதியை மீறியதற்கு அபராதம் கட்டி உள்ளார், அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் நோ பார்க்கிங்கில் காரை நிறுத்தியதற்காக அபராதம் செலுத்தி உள்ளார்.
அங்கு போக்குவரத்து விதியை மீறினால் ஒத்துக் கொள்கின்றனர். ஆனால் இங்கு ஒப்புக் கொள்வதில்லை என்று ஸ்டண்ட் அடித்த வில்சன், இந்தியாவிலேயே லஞ்சம் வாங்காத போக்குவரத்து போலீஸ் நம்ம ஊர் போலீஸ் தான் என்றவரிடம், அப்படியா ? என்று வியப்புடன் கேட்டதும் ,சில உயர் அதிகாரிகளின் பேராசையால் வாகன உரிமையாளர்களிடம் சில போலீசார் பணம் பெறுவதாக கூறி சமாளித்தார்
வில்சன் அடாவடி செய்து அபராதம் விதித்த சம்பவம் தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டனர். இதில் அவர் செய்த தவறு அம்பலமானதால் அவரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டனர்.