தட்டி திறக்காத கதவை பூட்டி திறக்க வைத்த சிவகங்கை சிங்கப்பெண்..! ஐ.ஐ.எப்.எல்பைனான்ஸுக்கு பல்ப்பே..!
Published : Jan 25, 2023 7:41 AM
தட்டி திறக்காத கதவை பூட்டி திறக்க வைத்த சிவகங்கை சிங்கப்பெண்..! ஐ.ஐ.எப்.எல்பைனான்ஸுக்கு பல்ப்பே..!
Jan 25, 2023 7:41 AM
சிவகங்கையில் அடகு வைத்த நகையை திரும்பத் தர மறுத்த நிதி நிறுவன இரும்பு கேட்டை இழுத்துப் பூட்டி பெண் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கையை அடுத்துள்ள முளைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணவனை இழந்த விதவைப் பெண் ராஜரெத்தினம். இவர் குடும்பத் தேவைக்காக தன்னுடைய 5 சவரன் தங்க நகையை சிவகங்கை வ.ஊ.சி தெருவில் உள்ள ஐ.ஐ.எப்.எல் என்ற தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 சவரன் நகையை அடகுவைத்து, சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கடன் பெற்று சென்றதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து கடந்த மாதம் ராஜரெத்தினத்தின் வீட்டிற்கு நிதி நிறுவனத்திலிருந்து தங்களின் நகை அடகு வைத்த நகைக்கான கால அவகாசம் முடிவடைய உள்ளதாக கூறி கடிதம் வந்துள்ளது. இதனை தொடர்ந்து அசல் பணத்துடன் வட்டி பணத்தையும் சேர்த்து நிதி நிறுவனத்திற்கு எடுத்து வந்து நகையை மீட்க வேண்டும் என ராஜரெத்தினம் ஊழியர்களிடம் கூறியுள்ளார். ஆனால் அங்கிருந்த ஊழியர்கள் பணத்தை செலுத்தினாலும் நகையை உடனடியாக திருப்பி தர இயலாது என கூறி அலைக்கழித்ததால் சிவகங்கை நகர் காவல் நிலையத்திலும், எஸ்.பி அலுவலகத்திலும் நகையை திரும்ப பெற்று தர கோரி மனு அளித்துள்ளார்.
ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் செவ்வாய்க்கிழமை அந்த அலுவலகத்திற்கு வந்த ராஜரெத்தினம் மாடிக்குச் செல்லும் இரும்புக் கதவை இழுத்துப் பூட்டி வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
முதலில் ஊழியர்கள் அந்தப் பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தான் அடகு வைத்த நகை தனது கைக்கு வரவேண்டும் என்பதில் ராஜரெத்தினம் உறுதியாக இருந்தார்.
இதனை தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் அவரை சமாதானம் செய்து கதவை திறக்க வைத்து ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மதுரையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உயர் அதிகாரிகள் வந்து ராஜரெத்தினத்தின் நகையை திருப்பிக் கொடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக போலீசாரிடம் உறுதி அளித்துச்சென்றனர்.
தட்டியும் திறக்காத கதவுகள், பூட்டியவுடன் திறக்கும் அதிசயத்தை தனது போராட்டத்தின் மூலம் நிகழ்த்திக் காட்டியுள்ளார் அந்தப் பெண்.