ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெல்கொள்முதல் நிலைத்தில் வியாபாரிகள் முறைகேடாக கூடுதல் விலைக்கு நெல்மூட்டைகளை விற்க உடந்தையாக இருந்ததாக கத்தியவாடி கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு புலனாய்வு போலீசாருக்கு தொடர் புகார்கள் வந்தன. விசாரணையில், வியாபாரிகள் சிலர் வெளிமாநிலங்களில் இருந்து குறைவான விலைக்கு நெல் மூட்டைகளை வாங்கி வந்து, அரக்கோணம், நெமிலி உள்ளிட்ட நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் என போலி ஆவணங்களை சமர்ப்பித்து, நெல்லை கூடுதல் விலைக்கு விற்றது தெரிய வந்தது.
அதன் மூலம் சுமார் 7 கோடி ரூபாய் வரை முறைகேடு செய்திருப்பதாகவும், கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்கனவே 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், இந்த வழக்கில் ஆற்காடு தாலுகா கத்தியவாடி கிராமத்தைச் சேர்ந்த விஏஓ பாலசுப்பிரமணியன் என்பவரையும் ரகசியமாக கண்காணித்து அவருக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்ததை தொடர்ந்து, நேற்று விஏஒ பால சுப்பிரமணியனை அதிரடியாக கைது செய்தனர்.