திமுக முன்னாள் எம்பி மஸ்தான் ஓடும் காரில் முகத்தை மூடி கொலை..! உறவினரால் நிகழ்த்தப்பட்ட கொடூரம்
Published : Dec 30, 2022 4:27 PM
திமுக முன்னாள் எம்பி மஸ்தான் ஓடும் காரில் முகத்தை மூடி கொலை..! உறவினரால் நிகழ்த்தப்பட்ட கொடூரம்
Dec 30, 2022 4:27 PM
திமுகவின் சிறுபான்மை நல உரிமைப்பிரிவு செயலாளரும் முன்னாள் எம்பியுமான மஸ்தான் காரில் செல்லும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் அவர் உறவினரால் கொலை செய்யப்பட்டது அம்பலமாகி உள்ளது. மருத்துவரான மகனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தால் துப்புதுலங்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் திமுகவின் முன்னாள் எம்.பி மஸ்தான். கடந்த 22 ந்தேதி மாலையில் தனது மகனுக்கு திருமண நிச்சயதார்த்தம் என்ற நிலையில் 21ந்தேதி இரவு 11 மணிக்கு தனக்கு வர வேண்டிய பணத்தை வாங்கி வருவதற்காக உறவினர் இம்ரான் என்பவருடன் சென்னையில் இருந்து திருச்சிக்கு காரில் சென்றார்.
22 ந்தேதி அதிகாலை 1:30 மணிக்கு அவரது கார் ஊரப்பாக்கம் பகுதியில் சென்றபோது, மஸ்தானுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், இதனையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்த்த பொழுது சிகிச்சை பலனின்றி, உயிரிழந்ததாகவும் உடன் சென்ற உறவினர் இம்ரான் தெரிவித்தார். சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பிணகூறாய்வில் மஸ்தான் மூச்சுத்தினறாலால் உயிரிழந்ததாக கூறப்பட்டது.
மஸ்தான் உடல் அடக்கம் செய்யப்பட்ட நிலையில் அவரது முகத்தில் காயம் இருந்ததை வைத்து தனது தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மருத்துவரான அவரது மகன் ஹாரீஷ் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் சம்பவத்தன்று மஸ்தானுடன் காரில் சென்ற அவரது மருமகன் இம்ரான் உள்ளிட்ட 5 பேரை போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.
தனக்கு கொடுத்த பணத்தை திரும்பக்கேட்டு வற்புறுத்திய மஸ்தானை , 22 ந்தேதி இரவு காரில் வைத்து இம்ரான்,நண்பர்களுடன் சேர்ந்து முகத்தை அமுக்கி கொலைச்செய்து விட்டு மாரடைப்பு நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து இம்ரான், சுல்தான் அகமது, நசீர், தவ்பிக், லோகேஷ் உள்ளிட்ட
5 பேரை கைது செய்துள்ள போலீசார் , கொலை செய்வதற்கு கொடுக்கப்பட்ட பணத்தில் 50 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.
தனது தந்தையிடம் பெற்ற பணத்தை திருப்பித் தருவதாக கூறி அழைத்துச்சென்று இம்ரான் கொலை செய்ததாக மஸ்தானின் மகன் ஹரீஷ் ஷா நவாஷ் தெரிவித்துள்ளார்.
இந்த கொலையினால் 22 ந்தேதி மாலை நடக்க இருக்க இருந்த திருமண நிச்சயதார்த்தம் நின்று போனது.