தெற்கு அந்தமான் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை அல்லது இரவுக்குள் புயலாக வலுப்பெற கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
நாகை, தஞ்சை மயிலாடுதுறை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் தேசிய பேரிடர் மீட்பு படையின் உதவி ஆய்வாளர் சந்தீப் குமார் தலைமையில் 35 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போட், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவைகள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை முதல் 3 நாட்களுக்கு சென்னை மாநகரில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து சென்னை மாநகராட்சி சார்பில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி , 8 முதல் 10 ஆம் தேதி வரை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மாநகராட்சி களப்பணியாளர்கள் பணியில் இருக்க வேண்டும், மழைநீர் அதிகம் தேங்கிய அனைத்து இடங்களிலும் மோட்டார்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும், அனைத்து கட்டுப்பாட்டு அறைகளும் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும், அனைத்து வார்டுகளிலும் மருத்துவ குழுக்கள் தயாராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.