தெற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக உருமாறக்கூடும் என்றும், புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே புயல் கரையைக் கடக்கக் கூடும் என்றும் வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாலச்சந்திரன், தென்மேற்கு வங்கக்கடலில் தற்போது நிலைகொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னையை நோக்கி மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும் என்றும் தமிழக கடலோர பகுதிகளில், அடுத்த 3 நாட்களுக்கு கொந்தளிப்பாக காணப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாளை கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 9ஆம் தேதியன்று, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்றும் பாலச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார். அன்றைய தினம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், வரும் 10ஆம் தேதியன்று, சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களிலும், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், டிசம்பர் 10ஆம் தேதியன்று, நீலகிரி, சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களிலும், 11ஆம் தேதியன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.