பள்ளிக்கூடம் போயிட்டு வாரேன்னு சொன்னானே.. ராசா விட்டு போயிட்டியே.. மாணவனுக்கு எமனான பள்ளி பேருந்து..!
Published : Nov 14, 2022 6:41 PM
பள்ளிக்கூடம் போயிட்டு வாரேன்னு சொன்னானே.. ராசா விட்டு போயிட்டியே.. மாணவனுக்கு எமனான பள்ளி பேருந்து..!
Nov 14, 2022 6:41 PM
ஈரோடு அடுத்த பூதப்பாடி இஞ்ஞாசியார் மெட்ரிக் பள்ளி பேருந்துக்குள் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த எட்டாம் வகுப்பு மாணவன் தவறி விழுந்து அதே பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது...
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள ஆனந்தம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாதையன் - தங்கமணி தம்பதியினர். இவர்களின் மூத்த மகன் திவாகர்பூதப்பாடி பகுதியில் உள்ள புனித இன்னாசியர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.
திங்கட்கிழமை காலை வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்ட மாணவன் பள்ளி வாகனத்தில் ஏறி சென்று உள்ளான், பள்ளி வாகனத்தில் சிறுவன் திவாகருடன் சேர்ந்து மொத்தம் மூன்று மாணவர்கள் மட்டுமே இருந்துள்ளனர். அந்த வாகனத்தில் மாணவ காப்பாளர் இல்லாததால் மூவரும் விளையாடிக் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. முன் பக்கம் மட்டுமே வாசலை கொண்ட அந்த பேருந்தின் திறந்து மூடும் வசதி கொண்ட தானியங்கி கதவும் திறந்தே வைக்கபட்டு இருந்தது. இதனை ஓட்டுனர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
அந்த வாகனம் அம்மாபேட்டை அடுத்த கோனேரிப்பட்டி பிரிவு அருகே வளைவில் திரும்பிய போது ஓட்டுனர் திடிரென பிரேக் அடித்ததால் நிலை தடுமாரிய சிறுவன் திவாகர் பள்ளி வாகனத்தின் முன் படிக்கட்டு வழியாக தவறி கீழே விழுந்துள்ளான். சாலையில் விழுந்த அந்த சிறுவன் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் அதே வாகனத்தின் பின் சக்கரம் ஏறியதால் சம்பவ இடத்திலேயே அந்த சிறுவன் பரிதாபமாக பலியானான்.
மாணவன் கீழே விழுந்ததை அதன் ஓட்டுனர் சரியாக கவனிக்காததால் இந்த கோர விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகின்றது. தகவல் அறிந்து அங்கு வந்த சிறுவனின் தாயும் பாட்டியும் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
கவனக்குறைவால் மாணவன் உயிரிழப்புக்கு காரணமானதாக ஓட்டுனர் ஸ்ரீ ராமராஜ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் பள்ளி வாகனத்தில் மாணவர் காப்பாளர் நியமிக்காதது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டுனரின் ஒரு நொடி அலட்சியத்தால் மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்தப்பள்ளி பெற்றோரிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.