​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருமணத்துக்கு சென்று திரும்ப காலதாமதம் மனைவிக்கு நேர்ந்த கதி..! குப்பை குழியில் மீட்கப்பட்ட கொடுமை

Published : Oct 22, 2022 5:08 PM



திருமணத்துக்கு சென்று திரும்ப காலதாமதம் மனைவிக்கு நேர்ந்த கதி..! குப்பை குழியில் மீட்கப்பட்ட கொடுமை

Oct 22, 2022 5:08 PM

உறவினர் வீட்டுத்திருமணத்துக்கு சென்று விட்டு தாமதமாக வீட்டிற்கு திரும்பிய மனைவியை அடித்து கொலை செய்து மூட்டையாக கட்டி குப்பை குழியில் வீசிவிட்டு, மனைவி மாயமானதாக நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த புத்தூர் வயல் பகுதியை சேர்ந்தவர்  59 வயதான மோகன். இவருக்கு 53 வயதில் உஷா என்ற மனைவியும் இரு மகன்களும் இருந்தனர்.

ஒரு மகன் பெங்களூரிலும், ஒரு மகன் வெளிநாட்டிலும் பணிசெய்து வருகின்றனர்.

கடந்த 19ஆம் தேதி கூடலூரில் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக சென்ற உஷா வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

நீண்ட நேரம் ஆகியும் உஷா வீட்டிற்கு வரவில்லை என்றும் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை என்றும் கூறிய மோகன், உஷாவின் சகோதரர் சத்யனுடன் சென்று கூடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக விசாரணை  நடத்திய போலீசார்  சந்தேகத்தின் பேரில் கணவன் மோகனை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர்

மேலும் அவரது வீட்டில் வெள்ளிக்கிழமை சோதனையிட்டபோது வீட்டில் சில இடங்களில் ரத்தக்கறை இருந்தது. இதனைத் தொடர்ந்து மோகனிடம் தீவிர விசாரனை மேற்கொண்டதில் மனைவி உஷா மாயமான மர்மம் வெளிச்சத்திற்கு வந்தது.

மகன்கள் வெளியூர்களில் இருக்கும் நிலையில் மனைவியின் நடவடிக்கைகளில் சந்தேகப்பட்டு மோகன் மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று உஷா கூடலூரில் நடைபெற்ற திருமணத்திற்கு சென்றுவிட்டு தாமதமாக வீட்டுக்கு வந்துள்ளார்.

இதுகுறித்து கேட்டபோது இருவரிடையே மீண்டும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் வாக்குவாதம் முற்றி மோகன், உஷாவை கடுமையாக தாக்கி உள்ளார்.

எதிர்பாராத விதமான இந்த தாக்குதலில் மனைவி இறந்து விட்டதாகவும், பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த மோகன், சாக்கு மூட்டையில் உஷாவின்  சடலத்தை கட்டி இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் தனது காரில் கொண்டு போய் தேவர் சோலை சாலையில் கோழிக்கழிவுகள் கொட்டப்படும் புதர் நிறைந்த குப்பை குழியில் வீசிவிட்டு, இதனை மறைக்க மனைவி மாயமானதாக நாடகமாடியது  போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று உஷாவின் உடலை மீட்ட போலீசார் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு  பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

சம்பவம் தொடர்பாக கூடலூர் டிஎஸ்பி மகேஷ் குமார் நேரடியாக மோகனிடம்  விசாரணை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து மோகனை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்தனர்.

மனைவியின் வயதை கூட யோசிக்காமல் தீராத சந்தேகத்தால் உருவான தகராறு கொலையில் முடிந்ததால், அவர்களது இரு மகன்களும் தாயை இழந்தும், தந்தையை பிரிந்தும் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் .