​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரகசிய அறையுடன் மாமியார் - மருமகள் நடத்திய டாஸ்மாக்..! டி.விக்கு பின்னால் மதுபாட்டில் சுரங்கம்

Published : Oct 20, 2022 6:29 AM



ரகசிய அறையுடன் மாமியார் - மருமகள் நடத்திய டாஸ்மாக்..! டி.விக்கு பின்னால் மதுபாட்டில் சுரங்கம்

Oct 20, 2022 6:29 AM

தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரத்தில் பங்களா வீட்டில் ரகசிய மதுக்கடை நடத்திய மாமியார் மருமகளை போலீசார் கைது செய்தனர். டிவிக்கு பின்னால் ரகசிய அறை அமைத்து டிமிக்கி கொடுத்த மாமியார் மருமகள் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

மாமியார் மருமகள் என்றால் எலியும் பூனையுமாக சண்டை போடுவார்கள் என்ற சொலவடையை மாற்றி கூட்டு சேர்ந்து குடிகடை நடத்தி போலீசில் சிக்கிய மாமியார் - மருமகள் இவர்கள் தான்..!

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் சட்ட விரோதமாக இயங்கி வரும் 50 க்கும் மேற்பட்ட சந்து மதுக்கடைகளில் இரவு பகலாக 24 மணி நேரமும் மதுவிற்பனை நடந்துவந்தது. உள்ளூர் போலீசாரை கவனித்து விடுவதால் அவர்கள் கண்டுகொள்ளாமல் இருந்து வந்தனர்.

பென்னாகரம் டிஎஸ்பி இமயவர்மனின் தனிப்படை பென்னாகரம் பகுதியில் உள்ள பங்களா வீட்டில் மாமியார் மருமகள் சேர்ந்து கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்வது தெரியவந்தது.

அங்கு சோதனை செய்த போது மதுப்பாட்டில் ஏதும் சிக்கவில்லை, நீண்ட தேடுதல் வேட்டைக்கு பின்னர் வீட்டின் வரவேற்பறையில் அழகுற அமைக்கப்பட்டிருந்த ஷோகேஸையொட்டி அமைக்கப்பட்ட டிவியை தள்ளிப்பார்த்த போது உள்ளே ஒரு ரகசிய அறை இருந்தது அந்த அறை முழுவதும் அட்டைப்பெட்டிகளிலும், மூட்டையாகவும் மதுப்பாட்டில்கள் ஏராளமாக மறைத்து வைக்கப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். ரகசிய அறையில் மதுபாட்டில்களை பதுக்கி காவல்துறையினருக்கு டிமிக்கு கொடுத்து விற்பனை செய்து வந்துள்ளனர்.

அந்த அறையில் இருந்த 600க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் மாமியார் லட்சுமி ,மருமகள் மகேஸ்வரி ஆகிய இருவரையும் கைது செய்தனர். தீபாவளி பண்டிகையொட்டி மதுபாட்டில்களை பதுக்கிவைத்து இருமடங்கு விலையில் விற்பனை செய்வதற்க்காக வீட்டில் வைத்திருந்தாக கூறினர். தலைமறைவான மகேஸ்வரியின் கணவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சட்டவிரோத மது விற்பனையை கண்டு பிடித்த டி.எஸ்.பி இயமவரம்பனின் தனிப்படை போலீசாருடன் உள்ளூர் போலீசாரும் வரிசையாக நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர் அப்போது சந்துக்கடை சமாச்சாரத்தை மறைத்த உள்ளூர் போலீஸ்காரர்களை காவல் ஆய்வாளர் முறைத்துக் கொண்டே நின்றார்.