மாணவி ஸ்ரீமதியை அந்த கோலத்தில் படம் எடுத்து பரப்பிய பெரியப்பா..! செல்போனை கைப்பற்றிய போலீசார்
Published : Oct 14, 2022 2:46 PM
மாணவி ஸ்ரீமதியை அந்த கோலத்தில் படம் எடுத்து பரப்பிய பெரியப்பா..! செல்போனை கைப்பற்றிய போலீசார்
Oct 14, 2022 2:46 PM
கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் சடலம் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தபோது சட்டவிரோதமாக புகைப்படம் எடுத்து பரப்பியதாக மாணவியின் பெரியப்பா செல்போனை சிபிசிஐடி போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சிம்கார்டு கிடைத்தாலும் செல்போன் கிடைக்கவில்லை என்று மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்த பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு
கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக நடந்த பெரும் கலவரத்திற்கு , மாணவி ஸ்ரீமதி பிரேத பரிசோதனை அறையில் கேட்பாரற்று கிடப்பது போன்று எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் முக்கிய காரணமாக அமைந்ததை சிபிசிஐடி போலீசார் கண்டுபிடித்தனர்.
அந்த புகைப்படம் யாரால் எடுக்கப்பட்டு வாட்ஸ் அப்பில் பரப்பப்பட்டது என்று விசாரித்த போது, மாணவியின் தாய் செல்வியின் உடன் பிறந்த அக்காள் உமாவின் கணவர் செல்வம் என்பவரின் செல்போனில் இருந்து பரப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவத்தன்று செல்வியுடன் ஸ்ரீமதியின் சடலத்தை பார்ப்பதற்கு பிணவறைக்கு சென்ற செல்வம் மாணவியை அந்த கோலத்தில் தனது செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார்.
பின்னர் அந்த புகைப்படங்களை தனது உறவினர்களுக்கும், போராட்ட குழுவினரின் வாட்ஸ் அப் எண்களுக்கும் அனுப்பியது விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்து கடந்த மாதம் 22 ந்தேதி செல்வத்தின் சொந்த ஊரான சின்ன சேலம் அடுத்த மாமந்தூர் சென்ற சிபிசிஐடி போலீசார் செல்வத்திடம் விசாரணை நடத்தியதோடு அவரது செல்போனையும் பறிமுதல் செய்தனர்.
செல்போன் கைப்பற்றப்பட்டது தொடர்பாக இவ்வளவு நாட்களாக மவுனம் காத்து வந்த செல்வம், விழுப்புரம் எஸ்.பி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில் தனது வீட்டிற்கு விசாரணைக்கு வந்த போலீசார் தனது செல்போனை பறித்துச்சென்றதாகவும், தான் பலமுறை கேட்ட நிலையில் சிம்கார்டை மட்டும் திருப்பிக் கொடுத்து விட்டு செல்போன் வழக்கு விசாரணைக்கு தேவைப்படுகின்றது என்று தர மறுப்பதாக கூறி உள்ளார்.
பஞ்சர் ஒட்டும் கடை நடத்திவரும் தனக்கு, அந்த செல்போனில் உள்ள தொடர்பு எண்களை கொண்டுதான் தனது வாழ்வாதாரத்துக்கு தேவையான பணிகளை செய்து வந்ததாகவும், சிபிசிஐடி போலீசாரிடம் இருந்து அந்த செல்போனை தனக்கு மீட்டுத் தரும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளார்
கலவர வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடி போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் செல்வியின் நெருங்கிய உறவினர் ஒருவர் செல்போன் ஆதாரத்துடன் சிக்கி இருப்பது குறிப்பிடதக்கது.