பெண் காவலரின் மகள் ரெயிலுக்குள் தள்ளி கொலை எஸ்.ஐ மகன் தப்பி ஓட்டம்..! ரக்கடு பாய்ன்னாலே.. சீ ..இதான் பிரச்சனை..!
Published : Oct 13, 2022 8:43 PM
பெண் காவலரின் மகள் ரெயிலுக்குள் தள்ளி கொலை எஸ்.ஐ மகன் தப்பி ஓட்டம்..! ரக்கடு பாய்ன்னாலே.. சீ ..இதான் பிரச்சனை..!
Oct 13, 2022 8:43 PM
சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்திற்கு தாம்பரத்தில் இருந்து மின்சார ரெயில் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது பிளாட்பாரத்தில் நின்று இளம் பெண்ணுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த இளைஞர் , சட்டென்று அந்தப்பெண்ணை பிடித்து ரெயில் முன்பு தள்ளினார். தண்டவாளத்தில் விழுந்த அடுத்த நொடியே அந்தப்பெண்ணின் தலை துண்டானது.
அங்கிருந்து இளைஞர் தப்பி ஓடிவிட்டார் உடனடியாக ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது விரைந்து வந்த போலீசார் அந்த இளம் பெண்ணின் துண்டான உடல் பாகங்களை கைப்பற்றி பிணக்கூறாய்வுக்காக குரோம் பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் ஒருதலைக்காதல் விவகாரத்தில் இந்த கொலைச்சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது
கிண்டி அடுத்த ஆதம்பாக்கம் ராஜா தெரு காவலர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராமலட்சுமி, இவர் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.இவரது மகள் சத்தியா தியாகராய நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இதே காவலர் குடியிருப்பில் வசித்து வரும் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் தயாளன் என்பவரின் மகனான சதீஷ் , மாணவி சத்தியாவை பள்ளிப்பருவம் முதலே காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களின்
காதல் விவகாரம், சத்யாவின் பெற்றோருக்கு தெரிய வந்ததால் மகளை கடுமையாக எச்சரித்துள்ளனர்.
இதனால் கடந்த ஒரு வருடமாக சதீஷிடம் சத்தியா சரியாக பேசாமல் இருந்துள்ளார். சத்தியா மீது கோபத்தில் இருந்த சதீஸ் மூன்று மாதங்களுக்கு முன் அவரது கல்லூரிக்கு சென்று நுழைவாயிலில்
வைத்து சத்யாவை அடித்துள்ளார். சத்யாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்ட சதீஷை விசாரித்த போலீசார், இருவரது பெற்றோரும் காவல்துறையை சேர்ந்தவர்கள் என்பதால் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.
அதன்பின்னரும் சதீஷ் தெடர்ந்து சத்யாவிடம் பேச முயன்றுள்ளார் அவர் சமாதானம் அடையவில்லை என்று கூறப்படுகின்றது. இறுதியாக வியாழக்கிழமை பரங்கிமலை ரயில்நிலையத்தில் ரெயிலுக்காக தோழிகளுடன் காத்திருந்த மாணவி சத்தியாவிடம் வலியச்சென்று வம்பிழுத்து சதீஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதால் சத்தியா இனி தனக்கு கிடைக்க மாட்டாள் என்ற நிலைக்கு வந்த சதீஷ், செத்து ஒழி என்று ஆவேசமாக கத்தியபடி... தாம்பரத்தில் இருந்து வேகமாக வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு சத்யாவை பிடித்து தள்ளி கொலை செய்ததாக உடன் இருந்த தோழிகள் கண்ணீர்மல்க தெரிவித்தனர்
தப்பி ஓடிய சதீஷ்ஷை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து ரெயில்வே போலீசார் தேடி வந்த நிலையில் சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளான். முரட்டு இளைஞர்களை காதலித்தால் என்ன மாதிரியான விபரீதம் அரங்கேறும் என்பதற்கு இந்த கொடூர கொலைச் சம்பவம் மற்றும் ஒரு சாட்சியாகி இருக்கின்றது.
இதற்கிடையில் மகள் கொலை செய்யப்பட்டதை அறிந்த தந்தை மாணிக்கத்திற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து உறவினர்கள் அவரை உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாணிக்கம் உயிரிழந்தார். தற்போது அவரது உடல் ராஜிவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாணவியை ரயிலில் தள்ளி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துக் கொள்ள திட்டமிட்டதாகவும் ஆனால் பொதுமக்கள் சூழ்ந்ததால் அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாகவும் கைதான சதீஷ் வாக்குமூலம் அளித்துள்ளான்.
கடந்த வாரம் மாணவிக்கு அவரது உறவினருடன் திருமண நிச்சயம் செய்யப்பட்டதை அறிந்து, மாணவியை தன்னுடன் வருமாறு அழைத்ததாகவும், மாணவி வர மறுத்ததால், தனக்கு கிடைக்காதவள், யாருக்கும் கிடைக்கக்கூடாது என எண்ணத்தில் அவரை கொலை செய்ததாகவும் போலீசாரிடம் கூறியுள்ளான்.
இதனிடையே, மகள் இறந்த துக்கம் தாளாமல், அவரது தந்தை மாணிக்கம் விஷமருந்தி தற்கொலை செய்துக்கொண்டார். விஷம் கலந்த மதுவை குடித்ததால், நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, மாணிக்கம் உயிரிழந்தார்.
கொலை செய்யப்பட்ட மாணவியின் தாய் ராமலட்சுமி தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையாக உள்ளார். உயிரிழந்த கணவன் மற்றும் மகளின் உடலை பார்க்க முடியாமல் பரிதவித்துக் கொண்டிருக்கும் ராமலட்சுமியை நேரில் சந்தித்து, காவல்துறை அதிகாரிகள் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.