சென்னை தாம்பரத்தை அடுத்த படப்பையில் தீவிர ரத்த புற்று நோயால் கடந்த 4 ஆண்டுகளாக உயிருக்கு போராடும் 10 வயது சிறுமி லயாவின் உயிரை காப்பாற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதவ வேண்டும் என சிறுமியின் பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
முத்துப்பாண்டி-சித்ரா தம்பதியின் 10 வயது மகளான சிறுமி லயாவுக்கு ரத்த புற்றுநோய் பாதிப்பு இருப்பது கடந்த 2018 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.
கடந்த 4 ஆண்டுகளாக பள்ளிக்கும் செல்ல முடியாமல், மற்ற குழந்தைகளை போல் விளையாடவும் முடியாமல், இந்த அப்பாவி சிறுமி மருந்து மாத்திரை, ஊசிகளுடன் போராடி வருகிறார்.
கீமோ தெரப்பி,எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை என சிகிச்சைகள் பல எடுத்தாலும் பயன் இல்லை.
சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் இந்த ரத்த புற்று நோய்க்காக அளிக்கப்படும் கார் - டி எனப்படும் உயர்தர சிகிச்சையை வழங்கினால் தான் சிறுமி உயிர் பிழைக்க சாத்தியம் உள்ளது என்று மருத்துவர்கள் கைவிரித்து விட்டனர்.
கார் - டி சிகிச்சையை 15 தினங்களுக்குள் சிறுமிக்கு வழங்காவிட்டால் சிறுமியின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.