​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
“அம்மா போலவே இருக்கிறீர்கள்”.. மென்பொறியாளரிடம் பணம் கறந்த 45 வயது சைக்கோ குழந்தை..!

Published : Sep 29, 2022 3:14 PM



“அம்மா போலவே இருக்கிறீர்கள்”.. மென்பொறியாளரிடம் பணம் கறந்த 45 வயது சைக்கோ குழந்தை..!

Sep 29, 2022 3:14 PM

சென்னை சோழிங்க நல்லூரில் முக நூலில் பழகிய பெண் மென்பொறியாளரின் வீடுதேடிச்சென்று ரகளை செய்து விட்டு தப்பிய முகநூல் சைக்கோ இளைஞரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அம்மா போல இருப்பதாக கூறி பழகி பணம் கறந்த பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் தினகரன் பிரசாத். மேன் பவர் நிறுவனம் நடத்திவருவதாக கூறி 3 முகநூல் கணக்குகள் மூலம் ஏராளமான ஆண் பெண் நண்பர்களை கவர்ந்துள்ளார். பிரபல ஐ.ஏ.எஸ் அதிகாரியின் ஆன் லைன் ரசிகர்கள் எனக்கூறிக் கொண்டு முக நூலில் ஒரு குழுவை தொடங்கி அவரது புகழ்பாடி வந்துள்ளார்.

அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மக்கள் பணியால் கவரப்பட்ட பெண் மென்பொறியாளர் ஒருவரும் அந்த குழுவில் பங்கேற்றுள்ளார். அவ்வப்போது அந்த குழுவினர் ஒன்று திரண்டு கஷ்டப்படும் மக்களுக்கு தங்களால் இயன்ற சேவைகளை செய்து வந்துள்ளனர். இதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட தினகரன் பிரசாத், அந்த பெண் மென்பொறியாளரை பார்க்கும் போது இறந்து போன தனது தாயை போலவே சாந்தமான முகச்சாயலில் இருப்பதாக கூறி பழகி உள்ளான். முகநூல் சாட்டிங்கிலும் அம்மா என்றே அழைத்துள்ளது அந்த 45 வயது விபரீத குழந்தை..!

அடிக்கடி பல்வேறு உதவிகள் செய்வதாக கூறி மென்பொறியாளரிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பணம் பறிக்க தொடங்கி இருக்கிறான். அந்த பணத்தை வைத்து குடித்து குதூகலித்த தினகரனின் ஆட்டம் அம்பலமானதால் அந்த பெண், இவனுடன் பேசுவதை தவிர்த்து, முகநூல் கணக்கையும் பிளாக் செய்துள்ளார்.

தனக்கு சும்மா வந்த பணம் நின்று போனதால் ஆத்திரம் அடைந்த தினகரன் சம்பவத்தன்று குடி போதையில் செம்மஞ்சேரி பகுதியில் உள்ள அந்த பெண்ணின் அடுக்குமாடி குடியிருப்புக்கு நேரில் சென்று அம்மாவை சந்திக்க வேண்டும் என்று ரகளை செய்துள்ளான்.

அங்கிருந்த காவலாளி அனுமதி மறுத்த நிலையில் அவரை மீறி உள்ளே நுழைய முயன்றதால் உடனடியாக காவல்துறைக்கு அந்தப்பெண் தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் வருவதை அறிந்து அந்த போதை ஆசாமி அங்கிருந்து தப்பி ஓடி உள்ளான். அவனது வில்லிவாக்கம் வீட்டிற்கு சென்று போலீசார் விசாரித்த போது அவன் வீட்டை காலி செய்துவிட்டு சென்றது தெரியவந்தது. அவனது புகைப்படத்தை பல்வேறு காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

முகநூல் நண்பர்குழுவில் உள்ள ஆண் நண்பர்களின் பின்னணி அறியாமல் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு இரக்கப்பட்டு உதவி என்று பணம் கொடுத்து பழக்கினால் என்னமாதிரியான விபரீதம் வீடு தேடி வரும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி..!