காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே கேஸ் குடோனில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஊராட்சி மன்றத் தலைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே நேற்று மாலை 6.30 மணியளவில் கேஸ் குடோனில் திடீரென தீப்பற்றி, சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அச்சமயம் அங்கிருந்த குடோன் உரிமையாளர் ஜீவானந்தம், அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்து வீடுகளைச் சேர்ந்தவர்கள் என மொத்தம் 12 பேர் தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்தனர்.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேற்றிரவு அமைச்சர் தா.மோ அன்பரசன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உள்ளிட்டோர் நேரில் சந்தித்தனர். இன்று காலை அவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியமும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் அமைந்துள்ள கேஸ் குடோனில் சிலிண்டர்களை பாதுகாத்து வைக்க மட்டுமே அனுமதி பெற்றிருந்ததாகவும், அனுமதியின்றி பெரிய கேஸ் டேங்கர்களில் இருந்து கேஸ் சிலிண்டர்களுக்கு கேஸ் நிரப்பும் பணியின் போது எரிவாயு கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குடோன் வைப்பதற்கு எந்த மாதிரியான அனுமதி வாங்கப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி தேன்மொழி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார், மனைவி சாந்தி, உரிமையாளர் ஜீவானந்தம் உட்பட 5 பேர் மீது அஜாக்கிரதையாக செயல்பட்டது, உயிர் ஆபத்து விளைவிக்கும் வகையில் செயல்பட்டது என்பன உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஊராட்சிமன்ற தலைவரையும் அவரது மனைவியையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.