​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வேறு ஆள் இருந்தா பாரு.. வயசான ஆளா பாரு.. அவன் கிறுக்கனா இருக்கணும்..! பணத்துக்காக இப்படியும் சில பெண்கள்.!

Published : Sep 29, 2022 6:06 AM



வேறு ஆள் இருந்தா பாரு.. வயசான ஆளா பாரு.. அவன் கிறுக்கனா இருக்கணும்..! பணத்துக்காக இப்படியும் சில பெண்கள்.!

Sep 29, 2022 6:06 AM

கோபிச்செட்டிப்பாளையம் அருகே, புரோக்கர் கமிஷனுக்காக 35 வயது இளைஞரை ஏமாற்றித் திருமணம் செய்து கொண்ட பெண், வாட்ஸ் அப் குறுந்தகவலால் கையும் களவுமாக சிக்கி உள்ளார்.

தாய் தந்தையை இழந்த ஆதரவற்ற பெண் என்ற கதையை நம்பி, ஒரு பைசா கூட வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்து ஏமாந்தவரின் சோகம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள தாசப்பகவுண்டன் புதூரை சேர்ந்த 35 வயது இளைஞர், தனது திருமணத்துக்காக புரோக்கர்கள் மூலம் பெண் தேடியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சூளக்கரை பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் மூலம் சரிதா என்ற ஏழைப் பெண் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. சரிதா குறித்து விசாரணை செய்தபோது, தாய்- தந்தை விபத்தில் இறந்து விட்டதாகவும், ஒரு அண்ணன் அவரும் திருமணம் செய்து கொண்டு கேரளாவில் வசிப்பதாகவும், தற்போது ஆதரவு இல்லாமல் ஈரோட்டில் விடுதியில் தங்கி தனியார் பேப்பர் கோன் தயாரிக்கும் நிறுவனத்தில் சரிதா வேலை செய்து வருவதாகவும் விஜயலட்சுமி கூறியுள்ளார்.

அந்த இளைஞர் தனது நண்பர்கள், உறவினர்களிடம் 3 லட்சம் ரூபாயை கடனாக வாங்கி புரோக்கர் கமிஷனாக விஜயலெட்சுமியிடம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயையும், மீதியை திருமணத்திற்கும் செலவு செய்து உள்ளார்.

கடந்த மாதம் 22 ந்தேதி தாசப்பகவுண்டன் புதூர் சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் சரிதாவை அந்த இளைஞர் திருமணம் செய்து உள்ளார்.

மனைவி சரிதாவின் அன்பில் திளைத்து போன அந்த இளைஞர், தன் மனைவி செல்போனில் பெரியம்மா என்று கூறப்பட்ட விஜயலட்சுமிக்கு அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்களை கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனை வைத்து தனது மனைவி திருமண மோசடி கும்பலை சேர்ந்தவர் என்பதை அறிந்து அதிர்ந்து போன அந்த இளைஞர் ஒரு வாரம் மனமுடைந்து காணப்பட்டார்.

நண்பர்களின் ஆலோசனைப்படி தனது நண்பர் ஒருவருக்கு திருமணத்துக்கு அவசரமாக பெண் வேண்டும் என சரிதாவிடம் கூற, அவர் பெரியம்மா விஜயலட்சுமியை தொடர்பு கொண்டுள்ளார். விவாகரத்தான பெண் இருப்பதாக கூறி 80 ஆயிரம் ரூபாய் கமிஷன் பேசி திருமண பெண்ணுடன் தாசப்பகவுண்டன் புதூருக்கு வந்த போது திருமண மோசடி கும்பலை சுற்றிவளைத்து பிடித்தனர்.

தனது மனைவி சரிதாவின் திருமண மோசடியை ஊரார் முன்னிலையில் அம்பலப்படுத்திய அந்த இளைஞர் கையும் களவுமாக போலீசில் பிடித்துக் கொடுத்தார்

மோசடி மனைவி சரிதா, போலி பெரியம்மா விஜயலெட்சுமி, புரோக்கர் விஜயா ஆகிய 3 பேரையும் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒரு பைசா வரதட்சணை கேட்காமல் லட்சக்கணக்கில் புரோக்கர் கமிஷன் கொடுத்து திருமணம் முடித்த இளைஞர் வேதனையுடன் சிங்கிளாக தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

வரன் குறித்து முழுமையாக விசாரிக்காமல் திருமணம் செய்தால் என்ன மாதிரியான விபரீதம் அரங்கேறும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி..!