பொதுப் பாதை கேட்ட ஊர்ப் பெண்கள் மீது கல்வீசிய எஸ்.பி-யின் மகள்கள்..! பூந்தொட்டியை வீசிய காட்சிகள்.!
Published : Sep 28, 2022 6:42 AM
பொதுப் பாதை கேட்ட ஊர்ப் பெண்கள் மீது கல்வீசிய எஸ்.பி-யின் மகள்கள்..! பூந்தொட்டியை வீசிய காட்சிகள்.!
Sep 28, 2022 6:42 AM
சென்னையில் சிபிசிஐடி எஸ்.பி தில்லை நடராஜனுக்கு சொந்தமான பட்டா இடத்திற்குள் அத்துமீறி நுழைந்த அப்பகுதி வாசிகளை எஸ்.பியின் மகள்கள் கல்வீசி தாக்கிய சம்பவத்தின் வீடியோ வெளியாகி உள்ளது.
அம்பத்தூர் விஜயலட்சுமிபுரம் MC. ராஜா தெருவில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சாலையை சிபிசிஐடி காவல் துறையின் காவல் கண்காணிப்பாளர் தில்லை நடராஜன் என்பவர் தனக்கு சொந்தமான பட்டா இடம் என நீதிமன்ற உத்தரவு பெற்று சுவர் எழுப்பி உள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் அந்த சுவரை உடைத்து வீசியதாக கூறப்படுகின்றது. இதனால் அந்த சாலை பகுதியில் கட்டிட கழிவுகளை கொட்டி பொதுமக்கள் பயன்படுத்த இயலாதவாறு அடைத்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலையிட்டு சர்ச்சைக்குரிய சாலையை இறுதி உத்தரவு வரும் வரை அதிலிருக்கும் தடைகளை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என 7ஆவது மண்டல அலுவலருக்கு உத்தரவிட்டார்.
எந்த அரசு அதிகாரிகளும் பிரச்சனையை தீர்க்க முன்வராததால் அப்பகுதி மக்கள் கட்டிடகழிவுகளை அகற்ற முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல் கண்காணிப்பாளர் தில்லை நடராஜன் மகள்கள் மற்றும் அவரது மனைவி ஆகியோர் பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பொதுமக்கள் மீது செங்கற்களை தூக்கி வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது
உச்சகட்டமாக மாடியில் இருந்து பூந்தொட்டிகளை பொதுமக்கள் மீது வீசி எறிந்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் படி நடந்து கொண்டதாக கூறப்படுகின்றது..
இந்த தாக்குதலில் பொதுமக்கள் தரப்பில் ஒரு பெண் காயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் எவரும் வரவில்லை. இதற்கிடையே தன்னை ஒரு பெண் கடித்து விட்டதாகவும், கல்வீசி தாக்கியதாகவும் கூறி தில்லை நடராஜனின் 2 மகள்கள் மற்றும் மனைவி ஆகியோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள எஸ்.பி தில்லை நடராஜன்,அந்த நிலம் தனக்கு சொந்தமான பட்டா நிலம் என்றும் தான் போலீஸ் என்பதால் நீதிமன்ற உத்தரவுபடி செயல்படுவதாகவும், அப்பகுதி வாசிகள் வம்படியாக வந்து வழிப்பாதை கேட்டு பிரச்சனை செய்வதாகவும் தெரிவித்தார்.