30 வருட சர்வீஸ் வீண்.. விடுப்பு தரலைங்க..! பெண் சுபகாரியம் நின்னு போச்சு..! ஒரு எஸ்.எஸ்.ஐ யின் குமுறல்..!
Published : Sep 27, 2022 6:18 PM
30 வருட சர்வீஸ் வீண்.. விடுப்பு தரலைங்க..! பெண் சுபகாரியம் நின்னு போச்சு..! ஒரு எஸ்.எஸ்.ஐ யின் குமுறல்..!
Sep 27, 2022 6:18 PM
தமிழகம் முழுவதும் காவல்துறையினருக்கு வார ஓய்வு நாள் அளிக்க வேண்டும் என்று டிஜிபி உத்தரவிட்டுள்ள நிலையில் தனது மகளின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு கூட செல்லவிடாமல், பாதுகாப்புப்பணி என்று கோவைக்கு அனுப்பி வைத்ததாக சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களால் பாதுகாப்பு பணிக்காக அனைத்து போலீசாரும் விடுமுறையின்றி பணிபுரிய உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த தனது மகளின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி தடைபட்டு விட்டதாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல்நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சந்தானராஜ் வேதனையுடன் பேசிய ஆடியோ வைரலாகி வருகின்றது
ஒரு சப் டிவிசனுக்கு 4 காவலர்களும் ஒரு எஸ்.எஸ்.ஐ மட்டுமே பாதுகாப்பு பணிக்காக கேட்கப்பட்ட நிலையில், தன்னை குறிவைத்து கோவைக்கு அனுப்பி வைத்தது ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளார் சந்தனராஜ்.
30 வருடங்களாக காவல்துறையில் பணிபுரிந்து எந்த ஒரு பயனும் இல்லை, சொந்த மகள் நிச்சயதார்த்தத்தை கூட முறையாக செய்ய முடியவில்லை , டிபார்ட்மென்ட்க்கு நம்ம வேலை பார்த்து சர்வீஸ் பண்ணி என்ன புண்ணியம்’என நொந்து பேசியுள்ளார்.
அப்புறம் ஏன் காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் தற்கொலைக்கு செய்ய மாட்டார்கள் என்று ஆதங்கம் தெரிவித்துள்ள சந்தானராஜ், தான் தவறாக பேசி இருந்தால் மன்னித்துவிடும்படி கூறி இருப்பது காவல்துறையினரின் வலியை உணர்த்துவதாக உள்ளது.