ஜோடி ஆப் மூலம் செகண்ட் இன்னிங்ஸ் முதலிரவன்றே ஓட்டம்..! ரூ.2.50 லட்சம் நகை பணம் போச்சு..!
Published : Sep 27, 2022 4:40 PM
ஜோடி ஆப் மூலம் செகண்ட் இன்னிங்ஸ் முதலிரவன்றே ஓட்டம்..! ரூ.2.50 லட்சம் நகை பணம் போச்சு..!
Sep 27, 2022 4:40 PM
ஜோடி அப் மூலம் லாரி ஓட்டுனரை 2ஆவது திருமணம் செய்து கொண்ட பெண் ஒருவர் இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைப்பணத்துடன் முதலிரவு அறையில் இருந்து ஓட்டம் பிடித்த சம்பவம் அரங்கேறி உள்ளது. தனது மகனை பார்த்துக் கொள்ள மனைவி தேடியவரை மோசடி செய்த கேடி லேடி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அடுத்த சாணாரப்பட்டியை சேர்ந்தவர் லாரி டிரைவர் செந்தில் . 48 வயதான இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ள நிலையில் கடந்த 11 மாதத்திற்கு முன்பு மனைவி இறந்து விட்டார். இதனால் தனது மகனை கவனித்துக் கொள்வதற்காக கணவனை இழந்த பெண்கள் யாரையாவது மறுமணம் செய்து கொள்ளலாம் என்று ஜோடி என்ற செல்போன் ஆப் மூலம் பெண் தேடி உள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த கவிதா என்ற பெண் தன்னுடைய கணவர் இறந்து விட்டதாகவும் தான் திருமணம் சம்மதிப்பதாக செந்திலை தொடர்பு கொண்டுள்ளார். அடிக்கடி செல்போனில் பேசி வந்த கவிதா, தேவைப்படும் போது எல்லாம் செந்திலிடமிருந்து பணம் பெற்று வந்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 24ந் தேதி சேலம் வந்த கவிதாவை அங்குள்ள சிவன் கோவிலில் திருமணம் செய்துகொண்டார் செந்தில். எடப்பாடி சாணாரப்பட்டியிலுள்ள தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். செந்தில் அசந்து தூங்கிய நிலையில் முதலிரவன்றே 4 1/2 பவுன் நகை, வெள்ளிக்கொழுசு, ரொக்கப்பணம் என 2 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை சுருட்டிக்கொண்டு கவிதா இரவோடு இரவாக தப்பிச்சென்றதாக கூறப்படுகின்றது .
இந்த மோசடி தொடர்பாக புகார் அளித்தும் கொங்கணாபுரம் போலீசார் வழக்குபதிவு செய்யாமல், கவிதா தரப்பு வழக்கறிஞர்களை அமர வைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அப்போது செந்திலிடம் பணம், நகையை திருப்பி தருவதாக கூறி சமாதானம் செய்த வழக்கறிஞர்கள், பின்னர் எதுவுமே திருப்பி தராமல் சென்று விட்டதாக குற்றஞ்சாட்டி உள்ளார் செந்தில்.
சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செந்தில், புகார் அளித்ததையடுத்து கொங்கணாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்ததாக கூறப்படுகின்றது. தனது மகனுக்கு பாதுகாப்பு வேண்டும் என்ற நோக்கில் கணவனை இழந்த பெண் என்று நம்பி கவிதாவை ஜோடி ஆப் மூலம் திருமணம் செய்ததாகவும், கவிதா தன்னிடம் பேசிய ஆடியோ மற்றும் போட்டோ, வங்கிக் கணக்கிலிருந்து பணம் அனுப்பிய ஆதாரம் ஆகியவற்றையும் வெளியிட்டார். ஜோடி ஆப் மூலம் ஏமாற்றிச்சென்ற கேடி லேடியை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
செல்போன் ஆப்களை தேடிச்சென்று மோசடியில் சிக்காதீர்கள் என்று காவல்துறை எச்சரிக்கை செய்துள்ளது.