மறைந்த முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதி மரியாதை நிகழ்வில் பங்கேற்க டோக்கியோ செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் புமியோ கிஷிடாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
கடந்த ஜூலை 8ஆம் தேதியன்று ஜப்பானின் நாரா பகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பங்கேற்ற அந்நாட்டின் முன்னாள் பிரதமரான ஷின்ஷோ அபே சுட்டுக் கொல்லப்பட்டார். ஜப்பான் நாட்டில் நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமைக்குரியவர் ஷின்சோ அபே.
இந்நிலையில், டோக்கியோவில் நாளை அரசு மரியாதையுடன் ஷின்சோ அபேவிற்கு இறுதி மரியாதை செய்யப்பட உள்ளது. அதனை தொடர்ந்து, அகசகா அரண்மனையில் நினைவேந்தல் நிகழ்வும் நடைபெறுகிறது.
இந்த நிகழ்வுகளில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி டோக்கியோ செல்ல உள்ளார். மேலும், அமெரிக்கா துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் ஆஸ்திரேலியா, வியட்னாம், சிங்கப்பூர் உள்ளிட்ட 100 நாடுகளின் பிரதிநிதிகளும் அதில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபேவின் இறுதி மரியாதை நிகழ்வுகளுக்கு 94 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளதாகவும், இது மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கிற்கான செலவை விட அதிகம் என்றும் கூறப்படுகிறது.
டோக்கியோவில் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவையும், அபேவின் மனைவியையும் நேரில் சந்தித்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவிப்பார் என இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி - கிஷிடா இடையே இருதரப்பு சந்திப்பு நடைபெறும் என்றும் இருதரப்பு உறவு, அதனை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து கலந்தாலோசிக்கப்படும் என்றும் வெளியுறவுத்துறை செயலாளர் கூறினார்.