தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 20 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வேலூர், திருப்பத்தூர், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், சேலம் உள்ளிட்ட 20 மாவட்டங்களிலும் நாளை நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட 23 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளது.
வரும் 30 மற்றும் 31ம் தேதிகளில் டெல்டா மாவட்டங்கள் உட்பட 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள வானிலை மையம், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.
மேலும் குமரிக்கடல், தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தியுள்ளது.