உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்ததை அடுத்து உச்சநீதிமன்றத்தின் 49ஆவது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் பதவியேற்றார்.
டெல்லியில், குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய தலைமை நீதிபதிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தலைமை நீதிபதியாக பதவியேற்ற யு.யு. லலித், 74 நாட்கள் மட்டுமே பணியாற்றி நவம்பர் 8ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார்.
மகாராஷ்டிராவின் மும்பையில் 1957ஆம் ஆண்டில் பிறந்த யு.யு.லலித், 1983ஆம் ஆண்டில் வழக்கறிஞராக தனது பணியை தொடங்கினார்.
நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட 2ஜி அலைக்கற்றை வழக்கில் சிபிஐ தரப்பில் அரசு வழக்கறிஞராக யு.யு.லலித் செயல்பட்டார்.
30 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றிய யு.யு. லலித், கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 6 பேரில் ஒருவராக திகழ்ந்தார்.
8 ஆண்டுகளாக உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி இவர், தற்போது தலைமை நீதிபதியாகவும் பதவியேற்றுள்ளார்.