பள்ளி தாளாளர் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கிய சிபிசிஐடி..! ஏற்கனவே கொலை வழக்கு..!
Published : Aug 26, 2022 9:24 PM
பள்ளி தாளாளர் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கிய சிபிசிஐடி..! ஏற்கனவே கொலை வழக்கு..!
Aug 26, 2022 9:24 PM
கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் ஏற்கனவே இரு சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், தாளாளர் ரவிக்குமார் ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டவர் என்றும் நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 4 பேர் ஜாமீன் கோரி மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தன.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் மாணவியின் வலது பக்கத்தில் மட்டுமே காயம் உள்ளதாக முதல் பிரேத பரிசோதனை அறிக்கை கூறுவதாவும் நன்றாக படிக்குமாறு மட்டுமே ஆசிரியர்கள் கூறியதாகவும், மரணத்தில் தங்களுக்கு எந்த பங்கும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
சிபிசிஐடி காவல்துறை தரப்பில், ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், பள்ளியில் விடுதி அனுமதியின்றி நடத்தியது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும், நன்றாக படிக்குமாறு அவர்கள் அழுத்தம் கொடுத்ததாக கூறியதோடு, உயிரிழந்த மாணவி எழுதியதாக கூறப்படும் தற்கொலை குறித்த கடிதமும் வாசித்து காண்பிக்கப்பட்டது.
கடிதத்தின் அடிப்படையில் முகாந்திரம் இருப்பதாலேயே ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மாணவியின் மரணம் பள்ளி வளாகத்தில் நடந்துள்ளதால், தீவிரமான வழக்கு என்றும், அதனால் மனுதாரர்கள் தான் பொறுப்பு என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற சம்பவம் அந்த பள்ளியில் ஏற்கனவே இரண்டு முறை நிகழ்ந்துள்ளன என்றும், கொலை வழக்கு ஒன்றில் தாளாளர் ரவிக்குமார் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே அவர்களுக்கு இந்த வழக்கில் ஜாமீன் வழங்க கூடாது என்றும் வாதம் முன்வைக்கப்பட்டது
அப்போது நீதிபதி, தீவிரமானது என்றால் ஏன் இந்த வழக்கில் உடனடியாக கைது செய்யவில்லை என்றும், பெற்றோருக்கு உள்ள சந்தேகப்படி பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரம் ஏதும் உள்ளதா? என்றும் காவல்துறை தரப்பிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு விளக்கம் அளித்த காவல்துறை தரப்பு முதல் மற்றும் இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்தது தொடர்ந்து மாணவியின் தரப்பில் வைக்கப்பட்ட கேள்விகளையும் கேட்டுக் கொண்டதோடு பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியைகளுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டது.