நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக இன்று காலை 10.15 மணிக்கு திரௌபதி முர்மூ பதவியேற்கிறார். நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ராம்நாத் கோவிந்த் நேற்றோடு ஓய்வு பெற்ற நிலையில் இன்று 15வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மூ பதவியேற்கிறார். இன்று காலை 10.15 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். இவ்விழாவில் பிரதமர் மோடி மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.இதற்காக நாடாளுமன்ற மைய மண்டபத்தில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு பதவியேற்ற பிறகு அவருக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்படும். இதன்பிறகு அவர் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்த உள்ளார்.
முன்னதாக இன்று காலை மகாத்மா காந்தியடிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ள திரௌபதி முர்மூ, குடியரசுத்தலைவர் மாளிகையில் சம்பிரதாய வரவேற்பு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க உள்ளார்
கடந்த 18-ம் தேதி நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு 64 சதவீத வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு 36 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தன.