ஆவடி அருகே திருமுல்லைவாயலில் LUDO விளையாட்டில் பழகி வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து 50 லட்சம் பணம் கேட்டு சிறுமி மற்றும் தாயை மிரட்டிய பட்டதாரி இளைஞர் கைது செய்யப்பட்டார்.
ஆவடி அருகே திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் மகள் திருவேற்காட்டில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறாள்.
இவரது மகளுக்கு செல்போன் விளையாட்டான LUDOவில் திருவொற்றியூரை சேர்ந்த டிப்ளமோ பட்டதாரியான ஜோக்கர் என்கிற விக்னேஷ் என்பவர் அறிமுகமாகி பேசி வந்துள்ளார்.
பின்னர் இவர்களிடையே நட்பு வளர்ந்து செல்போன் எண் பரிமாறி TELEGRAM,HELLO YO போன்ற ஆப் வழியாக பேசி வந்துள்ளனர். இதன் மூலம் நெருங்கி பழக துவங்கிய இருவரும் நாளடைவில் ஆபாசமாக உரையாடியதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிறுமியை வீடியோ காலில் நிர்வாணமாக வர வற்புறுத்திய போது மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த விக்னேஷ் இருவரும் பேசிய ஆபாச உரையாடல்களை வீட்டில் கூறிவிடுவேன் என மிரட்டி பல முறை நிர்வாணமாக வீடியோ காலில் சிறுமியை தோன்ற செய்து பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் சிறுமி வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து கொண்ட விக்னேஷ் அங்கு நேரில் சென்று சிறுமியின் நிர்வாண வீடியோவை காட்டி, இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என பயமுறுத்தி கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் பெற்றோர் விசாரித்த போது நடந்தவற்றை கூறி அழுது இருக்கிறார். மேலும் சிறுமியை மிரட்டி குறுஞ்செய்தி அனுப்பியிருந்ததை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இது சம்பந்தமாக பெற்றோர் விக்னேஷை தொடர்பு கொண்டபோது தமக்கு ஒரு வீடியோவிற்கு 25 ஆயிரம் வீதம் 50 லட்சம் பணம் தர வேண்டும் என்றும் பணத்திற்காக என்ன வேண்டும் என்றாலும் செய்வேன் என்றும் மிரட்டியுள்ளார்.
மேலும் உனது மகள் நிர்வாண வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என கூறி தைரியமாக தனது GPAY எண்ணை அனுப்பி பணம் கேட்டு உள்ளார்.
இதுகுறித்து காவல் துறையினரிடமோ வேறு யாரிடமோ கூறினால் ஆபாச உரையாடல்களை உங்கள் பகுதியில் ஒட்டி காண்பித்து அவமானப்படுத்துவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
இது பற்றி சிறுமியின் தாய் ஆவடி மாநகர துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த திருமுல்லைவாயல் மகளிர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு செங்கல்பட்டு மாவட்டம் கொள்ளமேடு பகுதியில் பதுங்கியிருந்த விக்னேஷை கைது செய்தனர்.
அவனிடம் நடத்திய விசாரணையில் விக்னேஷ் மீது ஏற்கனவே PLANET ROMEO எனும் ஓரின சேர்க்கை ஆப் மூலமாக பழகி நட்பு ஏற்படுத்திக்கொண்டு தனிமையில் சந்திக்க வரும் ஆண்களை தாக்கி பணம், செல்போன் போன்றவை பறித்தது தொடர்பாக சாத்தாங்காடு காவல் நிலையத்தில் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றது தெரியவந்தது.