கர்நாடகத்தில் 28 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பணி முடிக்கப்பட்ட திட்டங்களைத் தொடக்கி வைத்துப் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, தமது ஒவ்வொரு நிமிடத்தையும் மக்களுக்குத் தொண்டாற்றச் செலவிடுவதாகத் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கொங்கண் ரயில்வேயில் 740 கிலோமீட்டர் மின்மயமாக்கப்பட்ட ரயில்பாதை, முழுவதும் குளிரூட்டப்பட்ட பெங்களூர் விஸ்வேஸ்வரையா ரயில் நிலையம், அரிசிக்கரை - துமக்கூர், ஏலகங்கா - பெனுகொண்டா ஆகியவற்றின் இடையான இரட்டை ரயில்பாதை ஆகியவற்றைப் பயன்பாட்டுக்குப் பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்.
யஸ்வந்த்பூர், பெங்களூர் கன்டோன்மென்ட் நிலையங்கள் மேம்பாட்டுப் பணி, பெங்களூர் புறநகர் ரயில் திட்டம், தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் ஆகியவற்றுக்கும் அடிக்கல் நாட்டினார்.
விழாவில் பேசிய பிரதமர் மோடி, ஒரே இந்தியா, சிறப்பான இந்தியா என்பதைக் காட்டும் வகையில் பெங்களூர் திகழ்வதாகவும், கடந்த எட்டாண்டுகளில் பெங்களூரின் வளர்ச்சிக்கு மத்திய அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பெங்களூரில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க ரயில், சாலை, மெட்ரோ, சுரங்கப்பாதை, மேம்பாலம் என அனைத்துத் திட்டங்களையும் மத்திய மாநில அரசுகள் நிறைவேற்றி வருவதாகத் தெரிவித்தார். பெங்களூர்ப் புறநகர்ப் பகுதிகளுக்குச் சிறந்த போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தத் தமது அரசு உறுதிபூண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.