முட்டம் மீனவ கிராமத்தில் அயர்ன் பாக்ஸால் குத்தி இரு பெண்கள் கொலை..!
Published : Jun 08, 2022 6:37 AM
முட்டம் மீனவ கிராமத்தில் அயர்ன் பாக்ஸால் குத்தி இரு பெண்கள் கொலை..!
Jun 08, 2022 6:37 AM
கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் மீனவ கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த தாய் மகளை கொலை செய்து நகைகள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் ஆன்றோ சகாயராஜ் மீன்பிடி தொழிலாளியான இவருக்கு பவுலின் மேரி என்ற மனைவியும் அலன், ஆரோன் என இரண்டு மகன்களும் உண்டு.
ஆன்றோ சகாயராஜ் மற்றும் மூத்த மகன் அலன் ஆகியோர் வெளிநாட்டில் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர் . இளைய மகன் ஆரோன் சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்த நிலையில் மனைவி பவுலின்மேரி அவரது தாயார் திரேசம்மாள் உடன் முட்டம் பகுதியில் ஆள் அரவமற்ற பல ஏக்கர் விவசாய நிலத்திற்கு நடுவே அமைந்துள்ள பங்களா வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.
சம்பவத்தன்று தாய் திரேசம்மாள் மற்றும் மகள் பவுலின் மேரி உறவினர் ஒருவரிடம் செல்போனில் பேசி விட்டு தூங்கச் சென்றதாக தெரிகிறது செவ்வாய்கிழமை காலை அவர்கள் மீண்டும் பவுலின் மேரியை செல்போனில் தொடர்பு கொண்ட போது பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
மதிய வேளையில் உறவினர்கள் நேரடியாக வீட்டிற்கு வந்துள்ளனர் அப்போது வீட்டின் கதவு பூட்டிய நிலையில் ஆள் அரவமின்றிக் காணப்பட்டதால் சந்தேகமடைந்த அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது தாயும் மகளும் வீட்டின் நடு தளத்தில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து வெள்ளிச்சந்தை போலீசார் விசாரணை நடத்திய நிலையில் நெல்லை சரக டிஐஜி பிரவேஷ் குமார், எஸ்.பி.ஹரி கிரண் பிரசாத் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்ததோடு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் அந்த பங்களா வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் முதலில் வீட்டிற்கு வெளியே இருந்த மின்சார மீட்டரை உடைத்து மின்சாரத்தை துண்டித்து விட்டு பின்னர் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் சென்றதோடு வீட்டில் இருந்த அயன்பாக்சால் தாய் மற்றும் மகளை தலையில் கடுமையாக தாக்கி கொலை செய்து விட்டு பவுலின் மேரி கழுத்தில் கிடந்த 11-சவரன் தாலி சங்கிலி தாய் திரேசம்மாள் கழுத்தில் கிடந்த 5-சவரன் தங்க சங்கிலி என 16-சவரன் தங்க நகைகளை அறுத்து எடுத்த மர்ம நபர்கள், கையில் கிடந்த மோதிரத்தையோ காதணிகளையோ கழட்டி எடுக்காமல் சென்றுள்ளனர்.
வீட்டில் இருந்த பீரோக்களையும் உடைத்து நகைகளை திருட முயற்சி செய்யாத கொலையாளிகள் வீட்டிற்கு வெளியே வந்து மீண்டும் கதவை பூட்டி விட்டு தப்பியோடியுள்ளனர்.
கொள்ளைக்காக நடந்த கொலையா ? வீட்டில் இருந்த 70-சவரனுக்கு மேற்பட்ட தங்க நகைகள் தப்பியதாக கூறப்படும் நிலையில் மர்ம நபர்கள் கொலைக்கான காரணத்தை திசை திருப்ப தாலி சங்கிலிகளை மட்டும் பறித்துச்சென்றார்களா ? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முன்னெடுத்து உள்ளனர்.
முட்டம் மட்டுமில்லாமல் பெரும்பாலான மீனவகிராமங்களில் கடலில் தங்கி மீன்பிடிக்கும் படகுகளில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் கூலி வேலைபார்த்து வரும் நிலையில், பகலிலோ, இரவிலோ புதிதாக வெளியாட்கள் உள்ளே நுழைந்தால் எளிதாக அடையாளம் காணும் திறன் வாய்ந்த ஒற்றுமை மிக்க மக்கள் வாழும் மீனவ கிராமத்திற்குள் நடந்திருக்கும் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதே நேரத்தில் கொலையாளிகளை பிடிக்க குளச்சல் உட்கோட்ட டிஎஸ்பி தங்கராமன் மேற்பார்வையில் 5-தனிப்படைகளை அமைத்து நெல்லை சரக டிஜஜி பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.