குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் ஓரிரு நாட்களில் அறிவிக்க உள்ளது. தங்கள் தரப்பு வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்து பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முக்கிய ஆலோசனை நடத்தி வருகின்றன.
ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் அதற்கு முன்னதாக தேர்தலை நடத்தி முடிக்கும் பணியில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
57 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் 10 ஆம் தேதி நிறைவு பெறுகிறது. புதிதாக தேர்வுசெய்யப்பட்ட உறுப்பினர்கள், உள்ளிட்ட எம்பிக்களும் அனைத்து மாநில எம்.எல்.ஏக்களும் வாக்களித்து குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்ய உள்ளனர்.
அடுத்த ஒரிரு நாட்களில் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை அறிவிப்பது குறித்து, கூட்டணி மற்றும் இதர கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி ஆலோசித்து வருகிறது.
அதேநேரம் திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா கட்சிகள் ஆதரவுடன் தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் பெயர் வேட்பாளராக இடம்பெறலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
பாஜகவின் உயர்மட்டத் தலைவர்களும் வேட்பாளராக யாரை அறிவிப்பது என்று தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன.