பார்வை மாற்றுத் திறனாளிகள் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும் வகையில், விடுதலையின் 75ஆம் ஆண்டு விழா முத்திரையுடன் கூடிய புதிய நாணயங்களை மக்களின் பயன்பாட்டுக்காகப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார்.
டெல்லி விஞ்ஞான் பவனில் நிதியமைச்சகம், நிறுவன விவகாரங்கள் அமைச்சகம் ஆகியவற்றின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது விடுதலையின் 75ஆம் ஆண்டு விழா முத்திரையுடன் கூடிய புதிய நாணயங்களை மக்களின் பயன்பாட்டுக்காக வெளியிட்டார். ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய், 20 ரூபாய் மதிப்பிலான இந்த நாணயங்கள் பார்வை மாற்றுத் திறனாளிகளால் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.
விழாவில் பேசிய பிரதமர் மோடி, விடுதலையின் 75ஆம் ஆண்டு விழாவை இந்த நாணயங்கள் நினைவூட்டும் என்றும், நாட்டின் வளர்ச்சிக்குப் பங்காற்ற மக்களை ஊக்கப்படுத்தும் என்றும் தெரிவித்தார். கடந்த எட்டாண்டுகளில் நாட்டின் வளர்ச்சியை விரைவு படுத்துவதிலும், ஏழைகளுக்கு அதிகாரமளிப்பதிலும் மக்கள் பங்களிப்பை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.
ஏழைகள் கண்ணியத்துடன் வாழ்வதற்கான வாய்ப்பைத் தூய்மை இந்தியா திட்டம் வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார். ஒரு காலத்தில் நாட்டின் கொள்கைகளும் முடிவுகளும் அரசை மையமாகக் கொண்டே எடுக்கப்பட்டதாகவும், நலத் திட்டங்களைப் பெறப் பயனாளிகள் அரசைத் தேடிச் செல்ல வேண்டிய நிலை இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இப்போது மக்களை மையமாகக் கொண்ட ஆட்சி உள்ளதாகவும், நலத்திட்டப் பயன்கள் நேரடியாக மக்களைச் சென்றடைவதாகவும் குறிப்பிட்டார்.