மண்வளம் காக்க இந்தியா ஐந்து திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும், காற்று மாசுபாடு, புவி வெப்பமாதலைக் குறைக்கப் பெட்ரோல் டீசலில் பத்து விழுக்காடு எத்தனால் கலந்து பயன்படுத்துவதை ஊக்குவித்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உலகச் சுற்றுச்சூழல் நாளையொட்டி டெல்லியில் ஈசா பவுண்டேசன் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மண்ணைக் காப்போம் என்கிற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, சுற்றுச்சூழலைக் காக்க இந்தியா உலக நாடுகளுடன் இணைந்து தொலைநோக்குடன் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
பெட்ரோல் டீசலில் பத்து விழுக்காடு எத்தனால் கலந்து பயன்படுத்துவதால் கடந்த எட்டாண்டுகளில் 27 இலட்சம் டன் கரிப்புகை வெளிப்பாடு குறைந்துள்ளதாகவும், பெட்ரோலிய இறக்குமதி குறைந்து 41 ஆயிரம் கோடி ரூபாய் அந்நியச் செலாவணி சேமிக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகள் 40 ஆயிரத்து 600 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.
கங்கைச் சமவெளிப் பகுதிகளில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க அரசு தீர்மானித்துள்ளதாகவும், இதன்மூலம் நஞ்சில்லா உணவு கிடைப்பதுடன், கங்கையைத் தூய்மைப்படுத்தும் திட்டமும் வலுவாகும் எனத் தெரிவித்தார்.
காற்று மாசுபாடு, புவி வெப்பமடைதலைத் தடுக்க மாசு கட்டுப்பாட்டுக்கான பிஎஸ் 6 விதிகள், எல்இடி பல்பு பயன்பாட்டுக்கான இயக்கம் ஆகியவற்றைச் செயல்படுத்தி வருவதாகத் தெரிவித்தார்.
பிஎம் கதிசக்தி திட்டத்தில் நூறு நீர்வழிப் பாதைகளில் போக்குவரத்தை மேம்படுத்துவது மாசுபாட்டைக் குறைக்க உதவும் என பிரதமர் குறிப்பிட்டார்.