​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்த தொழில் செஞ்சா கட்டுகட்டாக பணம்..! மிரண்டு போன போலீஸ்..! சென்னை போலீஸ் அதிரடி..!

Published : Jun 05, 2022 10:41 AM



இந்த தொழில் செஞ்சா கட்டுகட்டாக பணம்..! மிரண்டு போன போலீஸ்..! சென்னை போலீஸ் அதிரடி..!

Jun 05, 2022 10:41 AM

சென்னையில் 50 போலியான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்களை உருவாக்கி கோடிக்கணக்கில் மோசடி செய்த மூன்று சகோதரர்கள்  உட்பட 4 பேரை கைது செய்த போலீசார் 58 லட்சம் ரூபாயை கைப்பற்றி உள்ளனர்.

தூத்துக்குடியைச் சேர்ந்த சகோதரர்களான பொன்ராஜ், கெவின்ராஜ், டேனியல் ஆகியோர் கூட்டு சேர்ந்து அலுவலகமே இல்லாமல் GPR Resources என்ற பெயரில் போலி லாஜிஸ்டிக் நிறுவனம் ஒன்றை தொடங்கி உள்ளனர். சொந்தமாக ஒரு கண்டெய்னர் கூட இல்லாத நிலையில் தங்களிடம் ஆயிரக்கணக்கில் கன்டெய்னர்கள் இருப்பதாக கூறி குறைந்த வாடகைக்கு விடுவதாக கூறி போலி நிறுவனத்தையும் நடத்தி வந்துள்ளனர்.

இது போல 40க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை வைத்து பொருட்களை கப்பலில் பாதுகாப்பாக கொண்டு செல்வதற்காக கன்டெய்னர்களை வாடகைக்கு ஏற்பாடு செய்து கொடுக்கும் 50க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களை குறிவைத்து மொகா மோசடியில் ஈடுபட்டது வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.

சென்னையில் பல வருடங்களாக ஷிப்பிங் நிறுவனம் நடத்தி வரும் பெண் ஒருவரை தொடர்பு கொண்ட இந்த மோசடி சகோதரர்கள், கப்பல் மூலமாக தங்கள் சரக்குகளை தூத்துக்குடியிலிருந்து மாலத்தீவுக்கு கொண்டு செல்வதற்காக, வாடகைக்கு கண்டெய்னர்கள் தேவைப்படுவதாக கூறி உள்ளனர்.

மேலும் தங்களுக்கு தெரிந்த Fesa என்ற நிறுவனம் ஒன்று குறைந்த கட்டணத்தில் கண்டெய்னர்களை வாடகைக்கு விடுவதாகவும், அவர்களிடம் பெற்றுக் கொடுத்தால் உங்களுக்கும் கொஞ்சம் லாபம் கிடைக்கும் என்று ஆசைவார்த்தையை தூண்டிலாக போட, மோசடி சகோதர்களின் பேச்சை நம்பி Fesa என்ற அவர்களுக்கு சொந்தமான டுபாக்கூர் நிறுவனத்திடம் அந்தப்பெண் கண்டெய்னர்கள் வேண்டும் என்று கேட்டதும் அந்த பெண்ணின் நிறுவனத்திற்க்கு குறைந்த வாடகையில் கண்டெய்னர்களை கொடுத்துள்ளனர்.

ஆரம்பத்தில் 10 முதல் 50 கண்டெய்னர் வரை வாடகைக்கு பெற்றுக் கொடுத்துள்ளார் அந்தப்பெண். அதுவரை வரவு செலவு முறையாக சென்றுள்ளது. இதனை பயன்படுத்திய சகோதரர்கள் தங்களுக்கு 500 முதல் 1000 கண்டெய்னர்கள் தேவைப்படுவதாக கூற அந்தப்பெண்ணும் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று Fesa நிறுவனத்திடம் 7 கோடி ரூபாய் வரை கொடுத்து கண்டெய்னர்களை முன்பதிவு செய்துள்ளார்.

அதில் 5 கோடி ரூபாய் கட்டணத்திற்கு கண்டெய்னர்கள் வாடகைக்கு கொடுக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 2 கோடி ரூபாய் பணத்துடன் மோசடி சகோதர்கள் தொடர்பை துண்டித்துள்ளனர். அலுவலக முகவரியில் இருந்து அனைத்தும் போலி என்பது அந்த பெண்ணுக்கு தெரிந்துள்ளது.

இந்த மோசடி கும்பல் வேறு சில நபர்களிடம் கண்டெய்னர்களை ஏமாற்றி வாடகைக்கு பெற்று மோசடியாக தன்னிடம் கைமாற்றி விட்டதை அறிந்த அந்த பெண் இந்த மோசடி தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

இதையடுத்து அவர்கள் பயன்படுத்திய செல்போனை வைத்து விசாரணையை முன்னெடுத்த போலீசார் மோசடி சகோதர்களான பொன்ராஜ் , கெவின்ராஜ், டேனியல் இவர்களுக்கு உடந்தையாக இருந்த புதுச்சேரியை சேர்ந்த பேட்ரிக் மாரி விஜய் முருகப்பா ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

சமூக வலைதளங்களில் பல வருடங்களாக ஷிப்பிங் நிறுவனம் நடத்தி வரும் உரிமையாளர்களின் தொடர்பு எண்களை பட்டியலிட்டு, சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் உள்ள நிறுவனங்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. மோசடியில் ஈடுபட்ட நபர்களிடம் இருந்து 58 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றைப்பட்டுள்ளது

இந்த மோசடி பிரதர்ஸிடம் இருந்து 188 சவரன் தங்க நகைகள், 2 விலையுயர்ந்த சொகுசு கார்கள், 4 லேப்டாப், 6 செல்போன்கள், ஹார்டு டிஸ்குகள், போலி முத்திரைகள், 15 சிம் கார்டுகள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளதுடன், 61 வங்கி கணக்குகளில் உள்ள 20 லட்சம் ரூபாய் பணத்தை முடக்கி இருப்பதாகவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.