75 ஆண்டுகால பொது வாழ்க்கை... 50 ஆண்டுகளாக தி.மு.க. தலைவர்... ஐந்து முறை முதலமைச்சர்...13 முறை சட்டமன்ற உறுப்பினர்... எண்ணற்ற புத்தகங்களை எழுதிய எழுத்தாளர்... இவற்றுக்கு நடுவே, தமிழ்த் திரையுலகில் கலைஞர் கருணாநிதியின் சாதனைகள் பிரமிக்கத்தக்கவை.... அவரது பிறந்தநாளில், இதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பை பார்ப்போம்.
கலைஞர் கருணாநிதியின் வசனத்தில் மிளிர்ந்த பராசக்தி வசனங்கள்தான் இவை... பாடத்தெரிந்தவர்கள் மட்டுமே நடித்து வந்த காலம்போய், 1947ல் கருணாநிதி தமிழ்த் திரையுலகில் தடம்பதித்த பின் நிலைமை தலைகீழாக மாறியது...
கருணாநிதியின் நீண்ட வசனங்கள் அவரது எழுத்துத் திறமையை உலகுக்குப் பறைசாற்றின. பாடல்களைப் போன்று கருணாநிதியின் வசனங்களும் இசைத்தட்டுகளாய் வெளிவந்தன.
பகுத்தறிவு, சமூக சீர்திருத்தம், பிராமணிய எதிர்ப்பு, விதவைத் மறுமணம் என திராவிட இயக்கக் கருத்துகளால் பட்டைத் தீட்டப்பட்ட கருணாநிதியின் வசனங்கள் வாள்நுனிபோல் கூர்மையடைந்தன.
பூம்புகார், மலைக்கள்ளன், திரும்பிப் பார், ரங்கூன் ராதா, புதையல், ராஜா ராணி, அவன் பித்தனா, அரசிளங்குமரி, குறவஞ்சி போன்ற படங்களில் கருணாநிதியின் வசனங்கள் மூலைமுடுக்கெங்கும் எதிரொலித்தது.
எம்ஜிஆர், சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ஆர், எம்.ஆர்.ராதா, ஜெய்சங்கர், சிவகுமார் போன்ற முன்னணி நட்சத்திரங்கள், கருணாநிதியின் ஜீவனுள்ள வார்த்தைகளுக்கு உயிரோட்டம் கொடுத்தனர்.
சத்யராஜ், விஜயகாந்த், பிரபு என அடுத்தடுத்து வந்த கதாநாயகர்கள் கருணாநிதியின் வசனம் பேசி நடித்ததைப் பெருமையாகக் கருதுகின்றனர். பொன்னர் சங்கர் வரை அவர் எழுத்தில் உருவான படங்கள் 75க்கும் மேற்பட்டவை... இதுதவிர, 20க்கும் மேற்பட்ட படங்களில் தனித்துவம் வாய்ந்த பாடல்களையும் இயற்றியுள்ளார் கருணாநிதி.
அரசியல் எனும் முட்பாதையில் காயம்படும்போதும், களைப்படையும் போதும், தமது கருத்துகளைக் கூற கைகொடுத்தவை திரைப்படங்கள்தாம் என்பார் கலைஞர் கருணாநிதி. தமிழின்மீது கொண்ட காதலால் உயிரோட்டம் கொண்ட வசனங்களைத் தீட்டியவர் அவர். காலங்களைக் கடந்து தமிழர்கள் நெஞ்சங்களில் அவை என்றென்றும் நிறைந்திருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.