உத்தர பிரதேசத்தில் இன்று நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 80 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டிலான 1,406 திட்டங்களுக்கு, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
யோகி ஆதித்யநாத் ஆட்சிப் பொறுப்பேற்ற பின் ஏற்கனவே 2 முறை முதலீட்டாளர்கள் மாநாடு நடந்துள்ள நிலையில், இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கவுதம் அதானி, குமார்மங்கலம் பிர்லா, சஜன் ஜிந்தால், ஆனந்த் அம்பானி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
லக்னோவின் கோமதி நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பங்கேற்று 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 1,406 உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். உத்தரப் பிரதேசத்தில் ஏராளமான சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், விவசாயம் சார்ந்த தொழில்கள், கால்நடை வளர்ப்பு, மருந்து மற்றும் மருத்துவப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கப்பட உள்ளன.
ஆக்ரா, அயோத்தி, அமேதி, பரேலி உள்ளிட்ட இடங்களில் துவக்கப்படும் தொழில்கள் வாயிலாக ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என உத்தரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இன்றுமுதல் நடைமுறைப்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கான்பூர் அருகே உள்ள கிராமம் ஒன்றில் குடியரசுத் தலைவர் வசித்த பூர்வீக இல்லத்தை பொதுப் பயன்பாட்டிற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். இதனை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி இன்று பங்கேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.