130 கோடி மக்களின் முதன்மை சேவகனாகவே தம்மை கருதுவதாகவும், மக்களுக்காக்கவே தமது வாழ்க்கை அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் நடைபெற்ற மத்திய பா.ஜ.க அரசின் எட்டாம் ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவில் வறுமை நிலை தொடர்ந்து குறைந்து வருகிறது என்றார். 2014ஆம் ஆண்டிற்கு முன்பு இருந்த தை விட இப்போது நாட்டின் எல்லைகள் மிக பாதுகாப்பாக உள்ளதாக அவர் கூறினார்.
கடந்த 8 ஆண்டுகளில் தம்மை ஒரு முறைகூட பிரதமராக நினைத்ததில்லை என்ற அவர், கோப்புகளில் கையெழுத்திடும்போது மட்டுமே பிரதமர் என்ற பொறுப்பு உள்ளதாக தாம் கருதுவதாக குறிப்பிட்டார். 130 கோடி மக்களின் முதன்மை சேவகனாகவே தம்மை கருதுவதாகவும், மக்களுக்காகவே தமது வாழ்க்கை அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக நிகழ்ச்சியில் உரையாற்ற சிம்லாவின், ரிட்ஜ் மைதானத்திற்கு சென்ற பிரதமர் மோடிக்கு, வழிநெடுகிலும் மக்கள் மலர்களை தூவி உற்சாகமாக வரவேற்பளித்தனர்.
நிகழ்ச்சியில், 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 11 வது தவணைக்காக 21 ஆயிரம் கோடி ரூபாயை பிரதமர் மோடி விடுவித்தார். மத்திய அரசின் நலத்திட்ட பயனாளிகளுடனுடன் அவர் காணொலி மூலம் கலந்துரையாடினார்.