​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தனியார் பேருந்துன்னா வானத்திலயா ஓட்டிட்டு போறீங்க.. இறக்கி விட்டா என்னப்பா? அடாவடி ஓட்டுனரின் ஆவேச வீடியோ..!

Published : May 31, 2022 6:26 AM



தனியார் பேருந்துன்னா வானத்திலயா ஓட்டிட்டு போறீங்க.. இறக்கி விட்டா என்னப்பா? அடாவடி ஓட்டுனரின் ஆவேச வீடியோ..!

May 31, 2022 6:26 AM

தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் சென்ற தனியார் பேருந்து ஒன்றில் 25 ரூபாய் கொடுத்து பயணச்சீட்டு பெற்ற பயணி ஒருவர் தங்கள் கிராமத்தில் பேருந்தை நிறுத்தச்சொல்ல நடத்துனரோ, அரசுப் பேருந்தில் ஏறவேண்டியது தானே என்று மரியாதைக்குறைவாக பேசி பயணியிடம் அடாவடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் வந்து, கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் முருகவிலாஸ் பேருந்தில் பணிபுரியும் ஊழியரின் மிரட்டல் வீடியோ ஒன்று மண்டை ஓட்டு முத்திரையுடன் இணையத்தை கலக்கி வந்தது. இந்த நிலையில் முருகவிலாஸ் பேருந்தின் ஓட்டுனர் பயணிகளை பகிரங்கமாகவே மிரட்டும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது

தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பண்டாரவாடை என்ற ஊருக்கு செல்ல பயணி ஒருவர் முருகவிலாஸ் என்ற தனியார் பேருந்தில் ஏறி இருக்கையில் அமர்ந்துள்ளார்.

அந்த பயணி பண்டாரவாடை கிராமத்தில் இறங்குவதற்காக 25 ரூபாய் கொடுத்து நடத்துனரிடம் பயணச்சீட்டு பெற்ற நிலையில் 'பண்டாரவாடை, ராஜகிரி போறவங்க கீழ இறங்குங்க பஸ் போகும்போது ஏறுங்கள், இருக்கையில் அமரக்கூடாது' என்று ஓட்டுனர் சொல்ல, பயணிகள் இறங்க மறுத்ததாக கூறப்படுகிறது.

இருக்கையில் இருந்து எழுந்து வந்த ஒட்டுனர் பயணிகளை பேருந்தில் இருந்து இறங்க சொன்னதோடு, பின்னால் சி.ஆர்.சி பேருந்தில் ஏறி போக வேண்டியது தானே தனியார் பேருந்தில் ஏன் வருகின்றீர்கள் என்று ஒருமையிலும், மரியாதை குறைவாகவும் பேசினார்

இதனை பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுக்க, அப்போது ஓட்டுனர் வீடியோ எடுக்காத என்று நானும் மதுரக்காரத்தாண்டா... என்ற தோரணையில் தனக்கும் பண்டாரவடை தான் என்று மிரட்டல் விடுக்கும் வகையில் மீண்டும் ஒருமையிலும், தரக்குறைவாகவும் பேசினார்

சாதாரண ஆட்டோ ஓட்டுனர் காக்கி சீருடை அணியாவிட்டாலே அபராதம் விதிக்கும் போலீசார் தனியார் பேருந்தை காக்கி சீருடை அணியாமல் இயக்கிச் சென்றதோடு, பயணிகளை தரக்குறைவாக பேசி மிரட்டிய அடாவடி ஓட்டுனர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த தனியார் பேருந்து மட்டுமல்ல தமிழகத்தில் இயக்கப்படும் பெரும்பாலான தனியார் பேருந்துகள் ஏதோ வானத்தில் பறப்பதாக நினைத்து இடையில் உள்ள கிராமத்து மக்களை, பேருந்து நிலையத்தில் வைத்து தங்கள் பேருந்தில் ஏறி இருக்கையில் அமர்வதற்கு அனுமதிப்பது இல்லை.

இந்த பிரச்சனைக்கு சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நிரந்த தீர்வுகாணவேண்டும் என்பதே கிராமத்து பயணிகளின் ஆதங்கமாக உள்ளது.